2015-02-04 15:19:00

அமைதி ஆர்வலர்கள் – 1971ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது


பிப்.04,2015. 1971ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற Willy Brandt அவர்கள் ஓர் அரசியல்வாதி. 1969ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை ஜெர்மன் கூட்டுக் குடியரசை, அதாவது இரு ஜெர்மனிகளும் ஒன்றிணையாமல் இருந்த காலத்து மேற்கு ஜெர்மனியின் சான்சிலராக இருந்தவர். 1964ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை ஜெர்மனியின் சமூக சனநாயகக் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். EEC என்ற ஐரோப்பிய பொருளாதார அவை மூலம் மேற்கு ஐரோப்பாவில்  ஒத்துழைப்பை உறுதிப்படுத்தவும், மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனி நாடுகளுக்கு இடையே ஒப்புரவை ஏற்படுத்தவும் இவர் எடுத்த முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக 1971ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1930ம் ஆண்டுக்குப் பின்னர் ஜெர்மனியின் சமூக சனநாயகக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சான்சிலர், அதாவது ஜெர்மன் அரசின் தலைவர் இவர். இந்தியா போன்ற அரசியல் அமைப்பைக் கொண்டுள்ள நாடுகளின் மொழியில் சொல்லவேண்டுமானால் Willy Brandt அவர்கள் ஜெர்மனியின் பிரதமராகப் பணியாற்றியவர். 

Willy Brandt அவர்கள், ஜெர்மன் பேரரசின் Lübeck நகரில் 1913ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி பிறந்தார். Herbert Ernst Karl Frahm என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1929ம் ஆண்டில் ஜெர்மன் சோஷலிச இளையோர் அமைப்பிலும், 1930ம் ஆண்டில் SDP என்ற ஜெர்மனியின் சமூக சனநாயகக் கட்சியிலும் சேர்ந்தார். ஜெர்மனியில் நாத்சி அடக்குமுறைகளிலிருந்து தப்பிப்பதற்காக 1933ம் ஆண்டில் நார்வே சென்று, Willy Brandt என தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். 1937ம் ஆண்டில் இஸ்பெயினில் பத்திரிகையாளராக வேலை செய்தார். 1938ம் ஆண்டில் ஜெர்மன் அரசு இவரது குடியுரிமையைப் பறித்துக்கொண்டது. அதனால் நார்வே குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். 1940ம் ஆண்டில் நார்வே நாட்டை ஜெர்மன் படைகள் ஆக்ரமித்தபோது இவர் ஜெர்மன் படைகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் நார்வே சீருடையை அணிந்திருந்ததால், இவரை யார் என அடையாளம் காணாத ஜெர்மன் படைகள் இவரை விடுதலை செய்தன. இதன்பின்னர் நடுநிலைமை காத்த சுவீடன் நாட்டுக்குச் சென்றார் இவர். 1940ம் ஆண்டு ஆகஸ்டில் நார்வே குடியுரிமையைப் பெற்றார். சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமிலுள்ள நார்வே தூதரகத்திலிருந்து கடவுச்சீட்டைப் பெற்று,  இரண்டாம் உலகப்போர் முடியும்வரை அந்நகரிலேயே தஙகியிருந்தார். 

Willy Brandt அவர்கள் 1946ம் ஆண்டில் பெர்லின் சென்று நார்வே அரசுக்காகப் பணியாற்றினார். 1948ம் ஆண்டில் பெர்லினில் ஜெர்மனியின் சமூக சனநாயகக் கட்சியில் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கி மீண்டும் ஜெர்மன் குடியுரிமை பெற்றார். 1956ம் ஆண்டின் ஹங்கேரி புரட்சியின்போது சோவியத் அடக்குமுறைக்கு எதிராகவும், 1958ம் ஆண்டில் பெர்லினை, சுதந்திர நகராக ஆக்குவதற்கு, சோவியத் யூனியன் பிரதமர் நிக்கிட்டா குருசேஷ் எடுத்த முயற்சிக்கு எதிராகவும் Brandt அவர்கள் வெளிப்படையாகக் கண்டித்துப் பேசினார். இதனால் இவர் தனது கட்சியில் வலதுசாரி நபர் என கருதப்பட்டாலும், பின்னாளில் இந்நிலை மாறியது. 1957ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டுவரை மேற்கு பெர்லின் நகரின் மேயராகப் பணியாற்றினார். அச்சமயத்தில்தான் பெர்லின் சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதோடு பனிப்போரின் அரசியல் அழுத்தங்களும் வலுவடைந்திருந்த இக்கட்டான காலம் அது. 1964ம் ஆண்டில் ஜெர்மனியின் சமூக சனநாயகக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட Brandt அவர்கள், அப்பணியை 1987ம் ஆண்டுவரை ஆற்றினார். 

Brandt அவர்கள் 1961ம் ஆண்டில் ஜெர்மனியின் சான்சிலர் பதவிக்கு SDP கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் அதில் தோல்வியடைந்தாலும், மீண்டும் 1965ம் ஆண்டிலும் இதே பதவிக்குப் போட்டியிட்டு அதிலும் தோல்வியடைந்தார். எனினும், 1966ம் ஆண்டில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், SDP கட்சிக்கும் இடையே ஏற்பட்ட கூட்டணியினால், Brandt வெளியுறவு அமைச்சராகவும், உதவி சான்சிலராகவும் பதவி வகித்தார். 1969ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர், கூட்டணி கட்சிகளுக்கு இடையே மூன்று வாரங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பலனாக அதே ஆண்டு அக்டோபர் 21ம் தேதி இவர் ஜெர்மனியின் சான்சிலரானார், அதாவது அந்நாட்டின் பிரதமரானார். பின்னர் இவர் நாட்டின் வெளிநாட்டு விவகாரங்களில் புதிய கொள்கையை உருவாக்கினார். சோவியத் யூனியன், போலந்து மற்றும் கிழக்கத்திய நாடுகளுடன் ஜெர்மன் சனநாயக குடியரசு நல்ல உறவை ஏற்படுத்தவே இப்புதிய கொள்கையை ஏற்படுத்தினார். இதனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே ஒரு சுமுகமான உறவு, முதல் முறையாக ஏற்பட்டது. Brandt அவர்களின் இப்பணிக்காக, இவருக்கு 1971ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. 

Brandt அவர்களின் இக்கொள்கை மேற்கு ஜெர்மனிக்குள் அதிக எதிர்ப்புக்களை ஏற்படுத்தியது. பல உறுப்பினர்கள் இவரது கட்சியிலிருந்து பிரிந்து அடுத்த கட்சியில் சேர்ந்தனர். 1972ம் ஆண்டு மே மாதத்தில் புதிய சான்சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வலியுறுத்தியது. ஆயினும் இதில் எதிர்க் கட்சிக்குத் தோல்வியே கிடைத்தது. இவரின் உதவியாளர்களில் ஒருவரான Gunter Guillaume என்பவர் கிழக்கு ஜெர்மனிக்கு உளவாளியாகச் செயல்படுகிறார் என மேற்கு ஜெர்மனி பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனால் 1974ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி Guillaume  கைது செய்யப்பட்டார். Brandt அவர்களும் அதே ஆண்டு மே 17ம் தேதி தனது பதவியைத் துறந்தார். 

சான்சிலர் பதவியைத் துறந்தாலும் தனது கட்சியின் தலைவராகப் பணியைத் தொடர்ந்த Brandt அவர்கள், அனைத்துலக சோஷலிச அமைப்பின் தலைவராகவும் 1976ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை பணியாற்றினார். 1983ம் ஆண்டில் போர்த்துக்கல் நாடு கம்யூனிச ஆட்சியின்கீழ் வரவிருந்த சமயம் இவர் சுவாரஸ் அவர்களின் சனநாயகக் கட்சியை ஆதரித்தார். தேர்தலில் இக்கட்சியும் வெற்றி பெற்றது. போர்த்துக்கல் நாடும் மக்களாட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. இஸ்பெயின் நாட்டுக்கும் இவர் உதவி செய்துள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் உறுப்பினராக இருந்த Brandt அவர்கள்,  1992ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி தனது 78வது வயதில் காலமானார்.     

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.