2015-02-03 10:25:00

துறவிகள் தங்களையே பணியாளர்களாகத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்


பிப்.03,2015. அர்ப்பண வாழ்வைத் தேர்ந்துகொண்டவர்கள், பணி புரிவதற்காகத் தங்களையே பணியாளர்களாகத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், இதுவே அவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேறுவதன் அடையாளம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவாகிய இத்திங்கள் மாலை 5.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அர்ப்பண வாழ்வு வாழும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் துறவிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

துறவு வாழ்வு ஒரு கேலிக்கூத்தாக மாறிவிடாமல் இருப்பதைத் தவிர்க்கும் விதத்தில் துறவிகள் பணிவிலும் தாழ்ச்சியிலும் இயேசுவால் வழிநடத்தப்பட தங்களையே கையளிக்க வேண்டும், இதன்மூலம் பிறருக்கு இவர்கள் நல்ல வழிகாட்டிகளாகச் செயல்பட முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தை இயேசுவை தமது கரங்களில் தாங்கிக் கொண்டு அவர் தம் மக்களைச் சந்திக்க அவரை ஆலயத்துக்கு கொண்டு செல்லும் அன்னை மரியாவை நம் கண்முன் கொண்டு வருவோம், அன்னை மரியா நடந்து சென்றாலும் அந்தத் தெய்வக் குழந்தையே அன்னைக்குமுன் சென்று கடவுளின் பாதையை அன்னைக்குக் காட்டுகின்றார் என்று கூறிய திருத்தந்தை, அர்ப்பண வாழ்வு வாழும் நமக்கும் இயேசு பாதையைத் திறந்துவிட்டுள்ளார் என்றும் கூறினார்.

இறைமகன் நம்மைப்போல் ஒருவராக இறங்கி வந்த கடவுளின் அருள்பொழியும் ஏணியாக அன்னை மரியாவின் கரங்கள் உள்ளன என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, அர்ப்பண வாழ்வைத் தேர்ந்துகொண்டவர்களுக்கு நற்செய்தி கூறும் பணிவு வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இயேசு தம் விருப்பத்தை அல்ல, மாறாக, நம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே இவ்வுலகுக்கு வந்தார், அதேபோல் இயேசுவைப் பின்பற்றும் அனைவரும் பணிவின் பாதையில் செல்ல வேண்டும் என்றும், ஒரு துறவி பணிபுரிவதற்காகத் தன்னையே பணியாளராக ஆக்கி, தன்னையே தாழ்த்தி வாழ்வதை வைத்துத் தான் அவர் தனது துறவு வாழ்வில் முன்னேறுகிறார் என்பதை நிர்ணயிக்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ப்பண வாழ்வைத் தேர்ந்துகொண்டவர்களுக்கு நற்செய்தி இன்றியமையாதச் சட்டமாக உள்ளது, எனினும், தூய ஆவியார் அர்ப்பண வாழ்வின் பல்வேறு சட்டங்களில் அதனை  வெளிப்படுத்துகிறார், இந்தச் சட்டத்தின் மூலம் இவர்கள் பெறும் ஞானம் தூய ஆவியாரின் பணியும் கொடையும் ஆகும், அடையாளமும் சாட்சியுமாக உள்ள இதுவே மகிழ்வு என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.