2015-02-03 16:07:00

திட்டவட்டமான செயல்கள் அவசியம் - பாக்தாத் முதுபெரும் தந்தை


சன.03,2015. மத்திய கிழக்கில் இடம்பெறும் பயங்கரவாத வன்முறைகளுக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்தால் மட்டும் போதாது, மாறாக, தீவிரவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் நிதி உதவிகள் செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று பாக்தாத் முதுபெரும் தந்தை இரஃபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.

பாக்தாத்தில் அரசு ஏற்பாடு செய்திருந்த மத நல்லிணக்க வார கருத்தரங்கில் உரையாற்றிய ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தீவிரவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் நிதி உதவிகள் செய்யும் அச்சுறுத்தும் கலாச்சாரம் தடைசெய்யப்பட்டு, பன்மைத்தன்மையை மதிக்கும் திறந்த மனம் கொண்ட புதிய கலாச்சாரம் உருவாப்படுவது அவசியம் என்று கூறினார்.

பள்ளிகளிலும், மற்ற இடங்களிலும் வரலாறும் மதமும் கற்பிக்கப்படும் விதத்தில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்திய பாக்தாத் முதுபெரும் தந்தை, ஒவ்வொரு மதமும் மதிக்கப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

சனவரியில் மட்டும் ஈராக்கில் 800 குடிமக்களும், சிரியாவில் 1354 பேரும் கொல்லப்பட்டுள்ளனர், சிரியாவில் நான்காவது ஆண்டாக இடம்பெற்று வரும் சண்டையில் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர், 400 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, 290 வரலாற்று நினைவிடங்கள் சேதமடைந்துள்ளன மற்றும் 32 இலட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.