2015-02-02 15:11:00

வாரம் ஓர் அலசல்–மத நல்லிணக்கத்துக்கு ஒரு மாமருந்து அன்பு


பிப்.02,2015. அருளாளர் Odoardo Focherini அவர்கள், 1944ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நாத்சி வதைமுகாமில் கொல்லப்பட்டவர். இத்தாலிய கத்தோலிக்கரான இவர், 1944ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி கைது செய்யப்பட்ட போது அவருக்கு வயது 37. மேலும், ஏழு குழந்தைகளுக்குத் தந்தையான இவர் கைதானபோது அவரின் மூத்த மகள் ஓல்காவுக்கு வயது 13. அச்சமயத்தில் Focherini அவர்கள், இத்தாலிக்கு அகதிகளாக வந்துகொண்டிருந்த யூதர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கி, நூறு யூதர்களைக் காப்பாற்றினார். யூதர்களுக்கு இவர் உதவி வந்ததால் கைது செய்யப்பட்டு நாத்சி வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டார். கடைசியாக ஜெர்மனியின் ஹெர்ஸ்பூர்க் வதைமுகாமில் இறந்தார். Odoardo Focherini அவர்களின் வீர வாழ்வை அங்கீகரித்த Yad Vashem என்ற யூத அமைப்பு, 1969ம் ஆண்டில் நாடுகள் மத்தியில் நேர்மையாளர் என்ற பட்டத்தை அளித்தது. Focherini அவர்கள் போன்று எத்தனையோ கத்தோலிக்கர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பல நூறு யூதர்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். இப்படி இவ்வுலகில் மனித நேயம் மிக்க நல்ல மனிதர்கள், மதங்களைக் கடந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து, சக மனிதர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

இந்த சனவரி 25ம் தேதி ஞாயிறன்று பீஹாரின் அஜீஸ்பூர் கிராமத்தில் நடைபெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில், ஷாயில் தேவி என்ற இந்துமதப் பெண், பத்து முஸ்லிம்களைக் காப்பாற்றியிருக்கிறார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அஜீஸ்பூர் கிராமத்தில், இந்துத் தீவிரவாதிகள் வெறியோடு புகுந்து முஸ்லிம்கள் நான்கு பேரை வெட்டிக் கொலை செய்து, 25க்கு மேற்பட்ட முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்து நாசப்படுத்தினர். பின்னர் முஸ்லிம்களைக் கொல்வதற்காக அவர்களைத் தேடினர். உடனே தனது பக்கத்து வீட்டு முஸ்லிம்கள் 10 பேரையும் தனது வீட்டுக்குள் மறைத்து வைத்தார் ஷாயில் தேவி. பின்னர் நடந்ததை அவரே விவரிக்கிறார்...

எனது வீட்டுக்குள் புகுந்த அந்தக் கூட்டம் 'முஸ்லிம்கள் இங்கு இருக்கிறார்களா?' என்று அதட்டிக் கேட்டது. இங்கு யாரும் முஸ்லிம்கள் இல்லை' என்று பொய் சொன்னேன். வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனர். நான் சத்தம் போட்டு அவர்களை வெளியில் அனுப்பினேன். பத்து உயிர்களை காப்பாற்றிய நிம்மதி கிடைத்தது. நான் முஸ்லிம்களைக் காப்பாற்றியதால் சிலர் எனக்கு மிரட்டலும் விடுத்தனர். எனவே பயந்துபோய் அருகில் உள்ள முஹம்மதின் வீட்டில் எனது இரண்டு பெண் குழந்தைகளோடு தஞ்சம் புகுந்து சில நாள்கள் வாழ்ந்தேன். மாவட்ட அரசு அதிகாரிகள் எனது உயிருக்கு உத்தரவாதம் கொடுத்ததால் எனது வீட்டுக்கு திரும்பியுள்ளேன் என்று சொல்லியிருக்கிறார் ஷாயில் தேவி. பீஹார் முதல்வர் Ram Manjhi அவர்கள், 51,000 ரூபாயை ஷாயில் தேவிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அன்பு நெஞ்சங்களே, இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளின் வன்செயல்கள் இந்நாள்களில் தினமும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக வெளியாகின்றன. போக்கோ ஹராம் குழுவினர் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏன் இஞ்ஞாயிறன்றுகூட அதிகாலையில், வட கிழக்கு நைஜீரியாவில் மாய்துகுரி நகரில் இக்குழு வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், ஐஎஸ் இஸ்லாமிய அரசின் தீவிரவாதக் குழுவிடம் பிடிபட்டிருந்த இரண்டாவது ஜப்பானிய பணயக் கைதியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் கடத்திச் செல்லப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் கெஞ்சி கோடோ அவர்கள் தலை வெட்டிக்கொலை செய்யப்படும் காட்சியை அந்தக் குழு இணையத்திலும் வெளியிட்டுள்ளது. ஐஎஸ் இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிராகப் போராடிவரும் நாடுகளுக்கு இராணுவம் சாராத உதவியாக இருபது கோடி டாலர்களை அளிப்பதாக ஜப்பான் அறிவித்திருந்தது. அந்த நிதியை தங்களிடம் கொடுத்தால் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதியை விடுவிப்போம் என்று இஸ்லாமிய அரசின் தீவிரவாத அமைப்பு அறிவித்திருந்தது. அந்தக் கோரிக்கை ஜப்பானிய அரசால் ஏற்கப்படாத நிலையே இப்படுகொலைகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது.

மத்திய கிழக்கில், குறிப்பாக ஈராக்கிலும், சிரியாவிலும் கிறிஸ்தவர்களும், பிற சிறுபான்மை இனத்தவரும் சமய அடக்குமுறைகளுக்குப் பலியாகி வருகின்றனர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமைகூட ஷியா பிரிவு முஸ்லிம் மசூதியில் தொழுகையின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பால் குறைந்தது அறுபது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் சில அரசியல்வாதிகளின் பேச்சுகளால் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடக்கும் பிரச்சனையும் நமக்குத் தெரிந்ததே. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் சமய சகிப்புத்தன்மைக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். கடவுளின் பெயரால் போர்கள் வேண்டாம், வன்முறைகள் வேண்டாம் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்து வருகிறார். அவர் இலங்கைக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில் சனவரி 13ம் தேதி பண்டார நாயக்க அரங்கத்தில் பல்சமயத் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றியபோதும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னரும், வருகிற ஜூன் 6ம் தேதியன்று போஸ்னியா மற்றும் ஹெர்செகோவினாவின் தலைநகர் Sarajevoவுக்குத் செல்வதாகவும், இப்பயணம், அமைதி, பல்சமய உரையாடல், நட்புறவு, உடன்பிறப்பு உணர்வு போன்றவைகளை ஊக்குவிக்க உதவ வேண்டுமென்று செபிக்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை . ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்தை, மத நல்லிணக்க வாரமாகக் கடைப்பிடிக்கிறது. இத்தகைய வாரம் உருவாக்கப்பட வேண்டுமென்று ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள் 2010ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று ஐ.நா. பொது அவையில் பரிந்துரை செய்தார். பின்னர் அதே ஆண்டு அக்டோபர் 20ம் தேதியன்று ஐ.நா.பொது அவை ஒரே மனதாக இதற்கு இசைவு தெரிவித்தது. உலக அமைதிக்கு மதங்களின் முக்கியமான பங்கை மத நல்லிணக்க வாரம் வலியுறுத்துகிறது. இத்தகைய ஒரு முயற்சி  2007ம் ஆண்டில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்களால் முதலில் தொடங்கப்பட்டது. ஒரே கடவுள் கொள்கையுடைய யூதம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களுக்கும் இதயமாக விளங்கும் இறையன்பு, பிறரன்பு ஆகிய இறைவனின் இரு கட்டளைகளின் அடிப்படையில் மதங்களுக்கு இடையே உரையாடல் இடம்பெற வேண்டுமென இவ்விரு மதத் தலைவர்களும் அழைப்பு விடுத்தனர்.

அனைத்து மதங்களின் போதனை அன்பு. கடவுள்மீது உண்மையான அன்பு, பிற உயிர்களிடத்தில் உண்மையான அன்பு. இவை இரண்டும் இருந்தாலே மதத் தீவிரவாதங்களும், பயங்கரவாதச் செயல்களும், அதனால் இடம்பெறும் மனிதத் துன்பங்களும் இல்லாத உலகமாக நாம் வாழும் பூமி மாறும். குடிக்க நீரில்லை, குடியிருக்க வீடில்லை, எல்லார்க்கும் கல்வியில்லை, எண்ணற்ற குழந்தை உழைப்பாளிகள். பல பட்டினிச் சாவுகள். இவை பற்றியெல்லாம் மனிதர் கவலைப்படாமல், மக்களைப் பிரிக்கும் மதவாதங்கள் மற்றும் சாதிச் சண்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இவற்றால் என்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது!

அவன் ஓர் ஏழைச் சிறுவன். வீடு வீடாகச் சென்று துணிகளை விற்று, அதனால் வரும் பணத்தைக் கொண்டு படித்து வந்தான். ஒருநாள் கடும்பசி அவனுக்கு. வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே பாக்கெட்டில் இருந்தது. ஏதாவது ஒரு வீட்டில் இந்தக் காசைக் கொடுத்து சாப்பாடு வாங்கிச் சாப்பிடலாம் என்று முடிவு செய்து, அருகில் இருந்த வீட்டின் கதவைத் தட்டினான். இனிய குரலுடன் கதவைத் திறந்த இளம்பெண் தேவதையாகவே காட்சியளித்தார். அவரிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல், “கொ… கொஞ்… கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான். அவனை ஏற இறங்கப் பார்த்த அப்பெண், அவன் கடும்பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்து, உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தார். பாலை மெதுவாகக் குடித்து முடித்த அந்தச் சிறுவன், “நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான். “நீங்க எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும்போது, அதற்கு பதிலா எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க என்றார் கனிவுடன். “அப்படீன்னா என் மனதின் ஆழத்திலிருந்து உங்களுக்கு ஒரு நன்றி சொல்கிறேன் என்றான் சிறுவன்.

ஆண்டுகள் பல கடந்தன. அன்று அழகு தேவதையாக இருந்த அப்பெண் இன்று படுக்கையில் படுத்த நோயாளி. உள்ளூர் மருத்துவர்கள் கைவிரிக்க, நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். அவருக்குச் சிகிச்சையளிக்க, மருத்துவ நிபுணர் டாக்டர் Howard Kelly அவர்கள் அழைத்து வரப்பட்டார். நோயாளி பற்றிய விபரங்களை தெரிந்து கொண்ட அவர், அன்றிலிருந்து அவருக்காக அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின் அந்நோயாளி முழுவதுமாகக் குணமடைந்தார். சிகிச்சைக்கான கட்டணத்தைத் தான் பார்த்த பிறகுதான் அவரிடம் கொடுக்க வேண்டும் என்று கணக்கர் பகுதிக்குக் கட்டளைப் பிறப்பித்தார் டாக்டர் Kelly. கட்டணச் சீட்டும் வந்தது. அதைப் பார்த்த மருத்துவர் அதில் எதையோ எழுதி அந்நோயாளியின் அறைக்கு அனுப்பினார். அதைப் பார்த்த அப்பெண், அந்தத் தொகையை முழுவதுமாகச் செலுத்தி முடிக்க வேண்டும் என்றால் என் ஆயுள் முழுக்கச் செலுத்தினாலும் போதாதே! என்று எண்ணினார். ஆயினும் அதோடு வந்த உறையை நடுக்கத்துடன் பிரித்தார். “ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்தத் தொகைக்கு பில்லுக்கு முழு கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது- இப்படிக்கு டாக்டர் Howard Kelly என அதில் எழுதப்பட்டிருந்தது.

அன்பர்களே, வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் சொன்னதுபோன்று, பெறுவதன் மூலம் நாம் வாழ்கிறோம். கொடுப்பதன் மூலம் நாம் வாழ்விக்கிறோம். எந்தக் கைம்மாறும் எதிர்பார்க்காமல் செய்கிற நல்ல காரியம், இன்றோ, நாளையோ அல்லது பல ஆண்டுகள் கழித்தோ நன்மையைக் கொண்டுவரும்.  சூரியன் தரும் ஒளியைப் போலவும், ரோஜா வீசுகிற மணம் போலவும், மலை உருவாக்கும் நதியைப் போலவும் நம் ஒவ்வொருவரிடமும் நிபந்தனையற்ற அன்பு நிறைந்திருக்க வேண்டும். நிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வதன் மூலமே வன்முறையையும், பயங்கரவாதத்தையும் அழிக்க முடியும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் காயத்துக்குக் காரணமாக இருக்கலாம். அதையே நினைத்துக்கொண்டு இராமல், அவர்களை மன்னித்துவிட்டாலே நமது மனம் லேசாகிவிடும். மன்னிக்கும் மனநிலை நம்மை வேதனைகளிலிருந்து விடுவித்துவிடும்; நம் கடந்த கால மனக் காயங்களில் இருந்து விடுபடுவதற்கு அன்பு ஒன்றே நல்ல தீர்வு. அன்புசெய்து வாழும் நபராய் அன்பர்களே நாம் ஒவ்வொருவரும் இருந்தால் எப்படியிருக்கும். மத நல்லிணக்கம், வார்த்தையில் இல்லாமல் நம் வாழ்வில் இருக்கட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.