2015-02-02 15:48:00

டெல்லியில் இன்னுமொரு கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டுள்ளது


பிப்.02,2015. இந்தியத் தலைநகர் டெல்லியின் மத்தியப் பகுதியில் உள்ள புனித அல்போன்ஸா கோவில், அடையாளம் தெரியாத நபர்களால் இஞ்ஞாயிறு இரவு சூறையாடப்பட்டுள்ளது.

அப்பங்குதள அருள்பணி வின்சென்ட் சல்வத்தோரே அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தபோது, திருநற்கருணைப் பேழை திறந்து கிடப்பதையும், திரு நற்கருணை அப்பங்கள், பலிபீடத்தில் சிதறிக் கிடப்பதையும் கண்டார். 

இது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட டெல்லி உயர் மறைமாவட்ட அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்பணி சவரிமுத்து சங்கர், இது ஒரு திருட்டு முயற்சியா அல்லது கிறிஸ்தவர்களுக்கு எதிரான விரோத நடவடிக்கையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

டெல்லி உயர்மறைமாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு  எதிராக நடத்தப்பட்டுள்ள ஐந்தாவது தாக்குதலாகும் இது.

இந்தியாவின் முதல் புனிதையான அல்போன்சாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள வசந்த குஞ் பகுதி கோவிலில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இக்கோவிலினுள் கண்காணிப்பு பதிவுக் கருவிப் பொருத்தியிருந்தால் விசாரணைகள் விரைவாக முடிய உதவியிருக்கும் எனவும் அறிவித்தார் அருள் பணி சவரிமுத்து.

இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து  கிறிஸ்தவர்கள் மீதான தாகுதல்கள் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : Asianews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.