2015-01-31 16:05:00

வீடற்றவர்களுக்கு வத்திக்கானின் இலவச சிகை அலங்காரக் கடை


சன.31,2015. வீடற்ற மக்களுக்கு மூன்று குளியல் அறை வசதிகளுடன், இலவச முடிதிருத்தம் செய்யும் வசதிகளையும் அமைத்துக் கொடுக்கிறது வத்திக்கான்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத் தூண்கள் பகுதியில், வீடற்ற மக்களுக்கு மூன்று குளியல் அறைகளும், இலவச சிகை அலங்காரக் கடையும் வருகிற பிப்ரவரி 16ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என்றும், சிகை அலங்காரக் கடை திங்கள்கிழமைகளில் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில், வழக்கமாக, சிகை அலங்காரக் கடைகளுக்கு, திங்கள்கிழமை விடுமுறை என்பதால், தன்னார்வப் பணியாளர்கள், வத்திக்கான் ஏற்பாடு செய்துள்ள இக்கடையில் இலவசமாகப் பணிசெய்வதற்கு உதவியாக இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் தர்மச் செயல்களைச் செய்துவரும் பேராயர் Konrad Krajewski அவர்கள், உரோமையில் வீடற்ற ஒரு மனிதரின் பிறந்த நாளன்று அம்மனிதருடன் உணவருந்தியபோது இந்த எண்ணம் உருவாகியது. திருத்தந்தையும் அதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இஸ்பெயின் நாட்டின் Mondoñedo-Ferrol மறைமாவட்ட காரித்தாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டுச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகத் தேவையில் இருப்போருக்கு இக்காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டியுள்ளார்.  

அம்மறைமாவட்ட ஆயர் Manuel Sànchez Monge அவர்களுக்கு அனுப்பியுள்ள இச்செய்தியில், கடவுளின் அன்பையும் அருளையும் வெளிப்படுத்தும் இப்பிறரன்புப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு கேட்டுள்ளதோடு, இந்நிறுவனத்தினருக்குத் தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/Zenit








All the contents on this site are copyrighted ©.