2015-01-31 16:10:00

போர்ப் பகுதிகளில் பெண்கள் பாதுகாக்கப்பட நடவடிக்கை அவசியம்


சன.31,2015. போர் இடம்பெறும் பகுதிகளில் பெண்களும் சிறுமிகளும் அதிகம் பாதிக்கப்படும்வேளை, போர் யுக்திகளில் ஒன்றாக, இவர்களின் உரிமைகள் திட்டமிட்டு மீறப்படுகின்றன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் குறை கூறினார்.

“ஆயுதம் ஏந்திய மோதல்களில் குடிமக்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவையில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத் தூதரகத்தின் முதல் ஆலோசகர் பேரருள்திரு Janusz Urbańczyk அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஆயுதம் ஏந்திய மோதல்களில் அப்பாவி குடிமக்கள், குறிப்பாக, பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்துப் பேசிய பேரருள்திரு Urbańczyk அவர்கள்,  சண்டை நடைபெறும் இடங்களில், தங்களின் மத நம்பிக்கைக்காக குறிவைத்து தாக்கப்படும் மக்கள் குறித்த அக்கறை குறைபடுவதைச் சுட்டிக் காட்டினார்.

பெண்களும் சிறுமிகளும் பாதுகாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுமாறும் வலியுறுத்திய அவர், உலகின் சில பகுதிகளில் கிறிஸ்தவர்களும், இன்னும் சில பகுதிகளில் கிறிஸ்தவப் பள்ளிகளில் சிறுமிகளும் முற்றிலும் ஒழிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதையும் ஐ.நா.வின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/Ze








All the contents on this site are copyrighted ©.