2015-01-31 16:18:00

தென் சூடான் தலைவர்கள் நிரந்தர அமைதியைக் கொண்டுவர வேண்டும்


சன.31,2015. தென் சூடானில் தங்களுக்கிடையே சண்டை போடும் அரசியல் தலைவர்கள் அந்நாட்டுக்கு நிரந்தர அமைதியைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஆழ்ந்து ஈடுபடுமாறு கேட்டுள்ளனர் ஆயர்கள்.

அரசியல் தலைவர்கள், தங்களின் அரசியல் வட்டத்திலிருந்து வெளிவந்து, அமைதியைக் கொண்டுவருவதற்குச் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் தென் சூடான் ஆயர்கள்.

இவ்வாறு தங்களின் செய்தியில் கூறியுள்ள ஆயர்கள், தென் சூடானில் அப்பாவி மக்களுக்கு எதிராக, தொடர்ந்து போரை நடத்துவதற்கு எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.

2015ம் ஆண்டு ஜூனில் நடைபெறும் பொதுத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமை சூழலை உருவாக்குமாறும் கேட்டுள்ள ஆயர்கள், நாட்டில் இடம்பெறும் நில அபகரிப்பு, உறுதியான தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். 

ஆயர்களின் இச்செய்தியை ஜூபா பேராயர் Paolino Lukudu Loro அவர்கள் பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.