2015-01-31 15:48:00

கடுகு சிறுத்தாலும் - அதிகாரத்தால் ஆட்டிவைக்கப்பட்ட பொம்மைகள்


கி.மு. 221ம் ஆண்டு முதல் 210ம் ஆண்டு வரை சீனப் பேரரசராக இருந்த Qin Shi Huang, மரணமற்ற வாழ்வை அடைவது எப்படி என்ற வழிகளை வாழ்நாளெல்லாம் தேடினார். இதனால், அவர் ஒவ்வோர் இரவும் வெவ்வேறு இடங்களில் உறங்கினார். இதற்காக, அவர் பல அரண்மனைகளைக் கட்டி, பூமிக்கடியில் தோண்டப்பட்ட சுரங்கப் பாதைகளால் அந்த அரண்மனைகளை இணைத்தார்.

கி.பி. 37 முதல் 41 வரை நான்கே ஆண்டுகள் உரோம் நகரை ஆண்ட 25 வயதான மன்னன் Caligula, மிகக் கொடுமையான மன்னன் என்ற பெயர் பெற்றவர். மன்னனுக்கு மிகவும் பிடித்த Incitatus என்ற பெயர்கொண்ட குதிரைக்கு விலையுயர்ந்த ஆடைகளை அணிவித்து, பளிங்கினால் கட்டப்பட்ட குதிரை இலாயத்தில் அக்குதிரையைப் பாதுகாக்க 10 பேரை நியமித்தார். அந்தக் குதிரை மன்னனோடு விருந்துண்ணும்படி ஏற்பாடுகள் செய்தார்.

15ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டு மன்னராக இருந்த 6ம் சார்ல்ஸ் (1380 - 1422) 'மதியிழந்த மன்னன்' என்றும் அழைக்கப்பட்டார். தன் உடல் கண்ணாடியால் ஆனது என்று நம்பிய மன்னன் சார்ல்ஸ், தன்னை உடையாமல் பாதுக்காக்க, இரவும் பகலும் மிகத் தடிமனான உடைகளையே அணிந்தார். தன்னை யாரும் தொடக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்.

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த Prussia நாட்டின் மன்னன் முதலாம் Friedrich Wilhelm (1713 - 1740) இராணுவத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். தன் மகன் இரண்டாம் Friedrichஐ தலை சிறந்த இராணுவ வீரனாக உருவாக்க விழைந்தார். எனவே, மகனின் குழந்தைப்பருவம் முதல், காலையில் அவனை எழுப்புவதற்கு, பீரங்கியை வெடிக்கச் செய்தார்.

அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கப்பட்ட பொம்மைகளாக வாழ்ந்த பல அரசர்களில் இவர்கள் ஒரு சிலரே! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.