2015-01-30 16:08:00

கருவில் சிசுவின் பாலினத்தை அறிவது தடை செய்யப்பட வேண்டும்


சன.30,2015. கூகுள், யாகூ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் வெளியிடும், கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை அறியும் விளம்பரங்கள் தடைசெய்யப்படுமாறு  இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையொட்டி கருத்து தெரிவித்த இந்திய ஆயர் ஒருவர், பெண்களுக்கு எதிராக இடம்பெறும் நடவடிக்கைகளில் கத்தோலிக்கத் திருஅவை எப்பொழுதும் முன்னணியில் நிற்கிறது என்று கூறினார்.

இந்திய ஆயர் பேரவையின் பெண்கள் அலுவலகத்தின் தலைவரான ஆயர் Jacob Mar Barnabas அவர்கள், தற்போது இப்பிரச்சனையை இந்திய அதிகாரிகளும் கவனத்தில் எடுத்துச் செயல்படுவதாகத் தெரிகின்றது என்று கூறினார்.

இந்தியாவில் எழுபது கிராமங்களில் பல ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை என்றும், நாடெங்கும் தினமும் இரண்டாயிரம் சிறுமிகள் வீதம் கொல்லப்படுகின்றனர் என்றும், நாட்டில் ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதம் உள்ளது என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

கருவில் வளரும் குழந்தையின் பாலினத் தொழில்நுட்பம் குறித்து 1994ம் ஆண்டில் வெளிவந்த இந்தியச் சட்டத்தின்படி கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை அறிவது தடைசெய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், சிறுமிகளைக் காக்கவும், சிறுமிகளுக்கு கல்வி வழங்கவுமென இரு திட்டங்களை இம்மாதம் 23ம் தேதி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

                           

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.