2015-01-29 15:18:00

புதிய அரசுக்கு நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் பொறுப்பு உள்ளது


சன.29,2015. இலங்கையில் பொறுப்பேற்றுள்ள அரசுத்தலைவர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்களின் புதிய அரசு, நாட்டில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யவும், பல்வேறு சமூகங்கள் மத்தியில் அமைதியையும், சமய நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கவுமான முக்கியமான கடமையைக் கொண்டிருக்கின்றது என்று அந்நாட்டுத் திருஅவைத் தலைவர் கூறினார்.

இலங்கையின் புதிய அரசில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், அண்மை மாதங்களில் இடம்பெற்றுள்ள சில தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள், சிறுபான்மை சமயக் குழுக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன என்று கூறினார்.

தங்கள் மதங்களில் நம்பிக்கை கொண்டுள்ள பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று கூறிய கர்தினால், புத்தமத விவகார அமைச்சர் புத்தமதத்தினரையும், இந்துமத விவகார அமைச்சர் இந்துக்களையும், கிறிஸ்தவ மத  விவகார அமைச்சர் கிறிஸ்தவர்களையும்  பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளதைப் பாராட்டியுள்ளார்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்வில் அடிப்படை கூறாக அமைந்துள்ள மதத்தை, மனிதரின் வாழ்விலிருந்து ஒதுக்கிவிட்டால் பல்வேறு சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாது என்றும் எச்சரித்தார் கர்தினால் இரஞ்சித்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.