2015-01-29 15:36:00

சவுதி அரேபியப் பாலைநிலப் பாறைகளில் பெருமளவில் சிலுவைகள்


சன.29,2015. சவுதி அரேபியாவின் பாலைநிலத்திலுள்ள பாறைகளில் கீறப்பட்டுள்ள பெருமளவான சிலுவை வடிவங்கள், அந்நாட்டில் ஏறக்குறைய ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமூகம் உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தற்குச் சான்றாக உள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

ப்ரெஞ்ச் மற்றும் சவுதி அரேபியப் புதைபொருள் ஆய்வாளர்கள் குழு ஒன்று இதனைக் கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியப் பாலைநிலத்திலுள்ள பாறைகளில் அதிக எண்ணிக்கையில் விவிலிய மற்றும் கிறிஸ்தவப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன என்றும், இவர்கள், ஐந்தாம் நூற்றாண்டில் இடம்பெற்ற கிறிஸ்தவ அடக்குமுறைகளின்போது மறைசாட்சிகளாகக்   கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் இந்த ஆய்வாளர்கள் குழு கணித்துள்ளது.

சவுதி அரேபியாவின் தென் பகுதியிலுள்ள Najranல், Jabal Kawkab அதாவது விண்மீன் மலைப் பாறைகளில் எழுதப்பட்டுள்ளவை, 470க்கும் 475ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தவை என்று இந்த ஆய்வுக் குழுவின் பேராசிரியர் Frédéric Imbert அவர்கள், பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

பழங்காலத்தில் கிணறுகளுக்குப் புகழ்பெற்ற Bi'r Hima அல்லது Abar Hima எனப்படும் இப்பகுதி, ஏமனையும் நஜ்ரானையும் இணைக்கும் பகுதியில் உள்ளது. இப்பகுதி வழியாக பயணம் சென்றவர்கள் இக்கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.