2015-01-29 15:27:00

கிரேக்க நாட்டின் புதிய அரசு மீது கத்தோலிக்கர் நம்பிக்கை


சன.29,2015.  கிரேக்க நாட்டில் இம்மாதம் 25ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி அரசு, குடிமக்களின் வாழ்வை முன்னேற்றும் மற்றும் சிறுபான்மை மதத்தவரைத் திறந்த மனத்தோடும் சமத்துவத்தோடும் நடத்தும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு கத்தோலிக்கப் பேராயர் ஒருவர்.

கிரேக்க நாட்டின் வரலாற்றில் ஏதோ ஒரு சிறப்பைக் காண முடிகின்றது என்றுரைத்த அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Nikolaos Printezis அவர்கள், கிரேக்க நாட்டில் ஆர்த்தடாக்ஸ் சபை குடிமக்களுக்கும், பிற சமய மக்களுக்கும் இடையே பிரிவினைகள் இருந்து வருகின்றன என்று கூறினார்.

நாட்டில் சிறுபான்மையினர் அனைவரும் அரசிடமிருந்து இதுவரை கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொண்டாதகவும் கூறிய பேராயர் Nikolaos அவர்கள், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு தனது சொந்த நலன்களுக்கு மட்டுமல்லாமல், கிரேக்க மக்கள் அனைவருக்கும் பொறுப்பேற்றுப் பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

கிரேக்க நாட்டு மக்களில் கத்தோலிக்கர் 3 விழுக்காடாகும். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்.

2008ம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட அரசியல் அமைப்பில், கிரேக்க நாட்டில் ஆர்த்தடாக்ஸ் சபை முக்கிய மதமாகவும், இச்சபையின் ஒப்புதல் இன்றி விவிலியம் மொழி பெயர்ப்பது தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : CNS வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.