2015-01-29 15:54:00

கழிவுநீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம்


சன.29,2015. வீடு, உணவகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி கேன்டீன்களில் பயன்படுத்திய நீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை தேனி மாவட்டம், பெரியகுளம்-தேவதானப்பட்டி அருகேயுள்ள வி.பி.வி., பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில், தண்ணீர் பிரச்சனை என்பது தீர்க்கப்படாத பெரிய பிரச்னையாக உருவெடுத்து வரும் நிலையில், கல்லூரியின் செயல் இயக்குனர் வினோத் தலைமையில், கட்டடத்துறை தலைவர் ஜெகன், ஆய்வக உதவியாளர் சந்திரசேகர், கட்டடத்துறை இறுதியாண்டு மாணவர்கள் விக்னேஷ்வரன், விக்னேஷ்குமார், ரவிபாரத், சுந்தர் ஆகியோர் இணைந்து கழிவு நீர் சுத்திகரிப்பு முறை என்ற திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தி வெற்றிகண்டுள்ளனர்.

இந்த நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்து மறுசுழற்சி முறையில் மீண்டும் நீரைப் பயன்படுத்த சான்று பெற்றுள்ளனர். வீடுகள், உணவகங்கள், பள்ளி, கல்லூரி கேன்டீன்களில் வீணாகும் நீரை, செலவில்லாமல் எளிய முறையில் எவ்வாறு மறு சுழற்சியில் நீரை சுத்தம் செய்வது என்று மாதிரி அமைப்பு இக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

நிலத்தின் மேலே உள்ள கலங்கலான நீர் நிலத்திற்கு அடியில் பல அடுக்குகளை கடந்து எப்படி தூய நிலத்தடி நீராக மாறுகிறதோ, இதை மூலமாக வைத்து மறுசுழற்சி முறை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.