2015-01-29 15:14:00

கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் மீட்கிறார்


சன.29,2015. எனது தனிப்பட்ட குழுவை, எனது திருஅவை சமூகத்தை, என்னை மட்டும் என இல்லாமல் கடவுள், நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் மீட்கிறார், ஏனெனில் மீட்பு, தனியார்மயமாக்கப்பட முடியாதது என்று இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழன் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், எபிரேயருக்கு எழுதப்பட்ட இந்நாளைய முதல் வாசகத்தை(எபி.10,19-25) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இயேசு விரும்பும் புதிய மற்றும் உயிருள்ள பாதையை நாம் பின்பற்ற வேண்டும், தவறான எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும் என்பதற்கு உதவும் வழிமுறைகளையும் அவர் நமக்கு வழங்குகிறார், மீட்பை தனியார்மயமாக்குவது இந்தத் தவறான எடுத்துக்காட்டுகளில் ஒன்று என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசு நம்மை ஒரு மரபினராய் அல்ல, ஆனால் நம் அனைவரையும், ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் பெயர்சொல்லி மீட்டுள்ளார் என்பது உண்மையே, ஆயினும், மக்களின் ஒரு பகுதியாக, இயேசு நம்மை தனிப்பட்ட விதத்தில் மீட்டுள்ளார் என்பதை மறக்கும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மைச் சுத்தப்படுத்தும் இயேசுவில் பற்றுறுதி, வாக்குறுதியை நோக்கி முன்னோக்கி நடக்க வைக்கும் நம்பிக்கை, பிறர்மீது அக்கறை காட்ட வைக்கின்ற, பிறரன்பிலும் நற்பணிகளிலும் ஒருவர் ஒருவரை ஊக்கப்படுத்தும் பிறரன்பு ஆகிய மூன்றும், மீட்பை தனியார்மயமாக்கும் தவற்றை விலக்கி வாழ உதவுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

நாம் நம் சபைகளைவிட்டு ஒதுங்கியிருக்கக் கூடாது என்ற மிக முக்கியமான நடைமுறை ஒழுங்கை எபிரேயருக்கு எழுதிய ஆசிரியர் நமக்குத் தருகிறார், நாம் எப்பொழுதும் இறைமக்கள் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்ற உணர்வு நம்மில் நாளும் அதிகமாக வளருவதற்கு ஆண்டவரிடம் வரம் கேட்போம் என்று தனது இத்திருப்பலி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “உண்மையான அன்பு, தான் துன்புறும் தீமைக்கு கவனம் செலுத்தாது, ஆனால் அத்தகைய அன்பு நன்மை செய்வதில் அகமகிழ்வடையும்”என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.