2015-01-28 16:01:00

நைஜர் ஆயர்கள் - முஸ்லிம் சமூகத்துடன் நட்பு உறுதி


சன.28,2015. நைஜர் நாட்டில் அண்மை நாள்களில் இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையில் தலத்திருஅவை கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருக்கும்வேளை, அந்நாட்டின் முஸ்லிம் சமூகத்துடன் கொண்டிருக்கும் நட்பையும் உடன்பிறப்பு உணர்வையும் தாங்கள் புதுப்பிக்க விரும்புவதாக நைஜர் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

நைஜர் நாட்டின் முஸ்லிம் சமூகத்துக்கென செய்தி வெளியிட்டுள்ள ஆயர்கள், அந்நாட்டில் கிறிஸ்தவ சமூகம் தாக்கப்பட்டபோது, அடையாளங்கள் மற்றும் செயல்களால் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டிய அனைத்து முஸ்லிம்களுக்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில், தங்களின் வழிபாட்டுத் தலங்களும், பெரும்பாலான உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டிருந்தாலும், தங்களின் விசுவாசம் மாறாமல் உறுதியாக இருக்கிறது என்றும், நமது எதிரிகள் திட்டமிட்டு அழிக்க விரும்பியதை நாம் மீண்டும் கட்டியெழுப்புவோம் என்றும் ஆயர்களின் செய்தி கூறுகிறது.

மக்களுக்குப் பணி செய்வதைத் தவிர வேறு நோக்கத்தைக் கொண்டிராத கத்தோலிக்கத் திருஅவை மெது மெதுவாக தனது பணிகளை மீண்டும் நைஜரில் துவக்கும் என்றும் ஆயர்களின் செய்தி கூறுகிறது.

பாரிசில் வெளியாகும் சார்லி ஹெப்தே வார இதழில் முஸ்லிம்களைக் கேலிசெய்து  எழுதப்பட்டிருந்த குறிப்புகளையொட்டி, நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை அண்மை நாள்களில் இடம்பெற்றது.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.