2015-01-28 16:14:00

தென் சூடானில் சிறார் படைவீரர்கள் விடுதலை, ஐ.நா. வரவேற்பு


சன.28,2015. தென் சூடானில் ஏறக்குறைய மூவாயிரம் சிறார் படைவீரர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையில் முதல் கட்டமாக, இச்செவ்வாயன்று 280 சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து தனது பாராட்டை தெரிவித்துள்ளது யூனிசெப் நிறுவனம்.

போர்ப் பகுதியிலிருந்து சிறார் படைவீரர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கும் மிகப் பெரிய நடவடிக்கையாக இதனைக் குறிப்பிட்டுள்ள ஐ.நா.வின் குழந்தை நல நிதியமான யூனிசெப், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள சிறார் 11க்கும் 17 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் கூறியது.

இச்சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்படுவதற்குப் பேச்சுவார்த்தைகளை நடத்திய யூனிசெப் நிறுவனம், வரும் வாரங்களில் இன்னும் அதிகமான சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறியது.

தென் சூடானில் கடந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 12 ஆயிரம் சிறார், ஆயுதக் குழுக்களால் கட்டாயமாகப் படைப்பிரிவுக்குச் சேர்க்கப்பட்டனர் என்றும் கூறியது யூனிசெப்.

2013ம் ஆண்டு டிசம்பரில், தென் சூடான் உதவி அரசுத்தலைவர் Riek Machar அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்தார் என்று அந்நாட்டு அரசுத்தலைவர் Salva Kiir அவர்கள் குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து தேசிய அளவில் வன்முறை தொடங்கியது. இதில் ஏறக்குறைய 15 இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்தனர்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.