2015-01-28 16:21:00

தமிழகத்தில் குழந்தைத் தொழில்முறைக்கு முடிவே இல்லை


சன.28,2015. தமிழகத்தில் முந்தைய பத்து ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்திருந்திருப்பதையும் விடுத்து, அம்மாநிலத்தில் இன்னும் ஒரு கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர் கடினமான வேலைகளைச் செய்து வருகின்றனர் என்று அண்மையில் வெளியான புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இவ்விபரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களை முற்றிலும் ஒழித்துவிடும் நோக்கத்தில், இம்மாதம் 21ம் தேதியிலிருந்து 11 நாள் நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசின் தொழில் துறை.

14 வயது வரையிலான குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை உள்ளவேளை, தமிழகத்தில் 2001ம் ஆண்டில் 4 கோடியே 19 இலட்சம் குழந்தை தொழிலாளர் இருந்தனர், ஆயினும் அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் அவ்வெண்ணிக்கை 29,656 பேராகக் குறைந்து விட்டது  என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

ஆனால், 2011ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின்படி, தமிழகத்தில், ஒரு கோடியே 51 இலட்சம் முழுநேரத் தொழிலாளர் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர், இவர்களில் ஒரு கோடியே 32 இலட்சம் பகுதி நேரத் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு  உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

ஆதாரம் : The Hindu/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.