2015-01-28 15:46:00

கியாரா லூபிச் வாழ்வைப் பின்பற்ற ஃபோக்கோலாரேக்கு அழைப்பு


சன.28,2015. ஃபோக்கோலாரே கத்தோலிக்க பக்த இயக்கத்தைத் தோற்றுவித்த Chiara Lubich அவர்களை முத்திப்பேறு பெற்றவராக உயர்த்துவதற்குரிய படிநிலைகள் தொடங்கப்பட்ட நிகழ்வுக்குத் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Chiara Lubich அவர்களை முத்திப்பேறு பெற்ற மற்றும் புனிதர் நிலைக்கு  உயர்த்துவதற்குரிய படிநிலைகள் இச்செவ்வாயன்று ஃபிரஸ்காத்தி பேராலயத்தில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு அனுப்பிய செய்தியில், Chiara Lubich அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வை ஃபோக்கோலாரே இயக்கத்தின் உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

Chiara Lubich அவர்கள், கிறிஸ்து மீது கொண்டிருந்த ஆழ்ந்த பற்றுறுதி மற்றும் திருஅவையின் ஒன்றிப்புக்கு மிகத் தாராளமாக அவர் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, Chiara Lubich அவர்களை முத்திப்பேறு பெற்றவராக உயர்த்துவதற்குரிய படிநிலைகளுக்குப் பொறுப்பேற்று நடத்தும் எல்லாருக்கும் தனது செபங்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் அனுப்பியுள்ளார்.

1920ம் ஆண்டு சனவரி 22ம் தேதி இத்தாலியின் ரோக்கா தி பாப்பா என்ற நகரில் பிறந்த Chiara Lubich அவர்கள், 2008ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி தனது 88 வது வயதில் காலமானார். இத்தாலிய கத்தோலிக்க ஆர்வலரான இவர், 1943ம் ஆண்டில் வட இத்தாலியின் Trentoவில் Focolare பக்த இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராகப் பணியாற்றியவர். இன்று இவ்வியக்கம் 182 நாடுகளில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.