2015-01-28 15:58:00

கடுகு சிறுத்தாலும்....மனதில் பாரமிருந்தால் மகிழ்ச்சியில்லை


முனிவர்  ஒருவரை பார்க்க வந்த ஒருவர், ‘எப்போதும் அன்பும் அமைதியும் குடிகொண்டவராக உங்களால் எப்படி இருக்க முடிகிறது’ என்று கேட்டார்.

அதற்கு முனிவர் "என்னைப் பற்றிக் கூறுவதற்குமுன்னர் உன்னைப்பற்றி நான் கூறுவதைக் கேள். இன்றைக்கு ஏழாம் நாள் நீ இறந்து விடப்போகிறாய்" என்றார்.

எல்லோரும் நம்பும் அந்த முனிவரை முழுவதுமாக நம்பிய அந்த மனிதர் வீடு வந்து சேர்ந்ததும், தன் மனைவி மக்களை அழைத்துத் தனக்குப் பிறகு சொத்தினை அவர்கள் எப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். தான் செய்த பாவங்களை எல்லாம் நினைத்து அழுது கழுவாய் தேடினார். எல்லாம் சரியாகச் செய்து முடித்துவிட்டோம் என்ற நிம்மதியும் மனதில் பிறந்தது. ஆறுநாள் கழிந்தது.

ஏழாம் நாள் முனிவர் அந்த மனிதரைப் பார்க்க வந்தார் "அன்பனே நீ இந்த ஏழு நாட்களில் யார் யாரிடம் சண்டை போட்டாய், என்னென்ன பாவங்கள் செய்தாய் சொல்" என்று கேட்டார்.

அதற்கு அவர் "சாவு என் கண் முன்னால் நிற்கும்போது பாவம் செய்ய எனக்கு ஏது நேரம்" என்று பதில் சொன்னார்.

உடனே முனிவர், "மரணம் எப்பொழுதும் என் கண் முன்னால் நின்று கொண்டிருப்பதாக நினைப்பதால்தான் நான் பாவங்கள் செய்வதில்லை. எப்போதும் அன்பும் அமைதியும் குடி கொண்டவனாக என்னால் இருக்க முடிகிறது. இப்பொழுது புரிகிறதா உனக்கு? இதை விளங்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஏழு நாட்களில் மரணம் என்று பொய் சொன்னேன். கவலைப்படாதே, நிம்மதி குடிகொள்ளும்" என்றார்.

இவ்வுலகப் பொருட்களே பெரிதென எண்ணிச் சுமந்தால், மனம் பாரம் தாங்காமல், அமைதியிழந்து அழுதுகொண்டேயிருக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.