2015-01-27 16:13:00

மனித வாழ்வுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆயர்கள் கண்டனம்


சன.27,2015. பிலிப்பீன்சில் இஸ்லாமியப் புரட்சிக்குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 43 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளவேளை, மனித வாழ்வுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வன்முறை நடவடிக்கைகளை வன்மையாய்க் கண்டித்துள்ளது அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை.

தென் பிலிப்பீன்சின் மின்டனாவோ முஸ்லிம் தன்னாட்சி மாநிலத்தில் இரு இஸ்லாமிய தீவிரவாதிகளை, காவல்துறை தேடியதையொட்டி, இஞ்ஞாயிறன்று MILF, Biff ஆகிய இரு இஸ்லாமியப் புரட்சிக்குழுக்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் குறைந்தது 43 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்செயலைக் கண்டித்துள்ள ஆயர்கள், பிலிப்பீன்ஸ் அரசுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கும், நாட்டில் அமைதி நிலவவும் தங்களின் ஆதரவை வழங்குவதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தொடர்ந்து இடையூறாய் இருப்பவர்கள் பக்கம் திருஅவை சார்ந்து இருக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.

அறிவற்ற இத்துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துள்ள ஆயர்கள், பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : CBCP/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.