2015-01-27 16:27:00

சொவேட்டோவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் ஒரு தேசிய அவமானம்


சன.27,2015. தென்னாப்ரிக்காவின் சொவேட்டோவிலும், ஜொகானஸ்பர்கிலும் வெளிநாட்டவரையும், அவர்களின் தொழில்களையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள், ஒரு தேசிய அவமானம் என்று, தென்னாப்ரிக்காவில் பணியாற்றும் இயேசு சபையினர் குறை கூறினர்.

தென்னாப்ரிக்க வரலாற்றின் வெட்கத்துக்குரிய நிறவெறியுணர்வு தொடருகின்றது என்றுரைத்த தென்னாப்ரிக்க இயேசு சபை நிறுவனம், வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அரசு செயல்படாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது என்று கூறியது.

சொவேட்டோவில், சொமாலி நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கடையை உடைத்துச் சூறையாட முயற்சித்த வன்கும்பலில் இருந்த 14 வயது சிறுவன் ஒருவரை அந்தக் கடைக்காரர் சுட்டுக் கொலை செய்ததாகக் கூறப்படுகின்றது. இத்தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் இறந்தனர். 

இத்தாக்குதல் நிறவெறியோடு தொடர்பற்றது என்று அரசு கூறியதைக் குறிப்பிட்டுள்ள இயேசு சபை நிறுவனம், வெளிநாட்டவரால் நடத்தப்படும் அக்கடைமீது நடத்தப்பட்ட தாக்குதல் நிறவெறியோடு தொடர்பில்லாததாக இருக்கலாம், ஆனால், அதற்குப் பின்னர், 80க்கும் மேற்பட்ட கடைகளும், வெளிநாட்டவரும் திட்டமிட்டு தாக்கப்பட்டதை எப்படி விளக்குவது எனக் கேட்டுள்ளது.

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.