2015-01-26 14:54:00

விசுவாசத்தைப் பிறருக்கு வழங்குவதில் முக்கியமானவர்கள் பெண்கள்


சன.26,2015. விசுவாசம் தூய ஆவியாரின் கொடை, இவ்விசுவாசத்தை மற்றவர்களுக்கு வழங்குபவர்கள் முக்கியமாக பெண்கள் என்று, ஆயர்களான திமொத்தேயு, தீத்து ஆகிய புனிதர்கள் விழாவான இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாளைய முதல் வாசகமான, புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய திருமடலை (2 திமொ.1,1-8) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்மாரும், பாட்டிமாரும் அடுத்த தலைமுறைகளுக்கு விசுவாசத்தை வழங்குகின்றார்கள் என்றும் கூறினார்.

இத்திங்கள் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, திமொத்தேயு பெற்றுள்ள விசுவாசம், அவரது பாட்டி லோயி, தாய் யூனிக்கி ஆகியோரிடமிருந்து தூய ஆவியாரிடமிருந்து பெற்றார் என, பவுலடிகளார் திமொத்தேயு மற்றும். கூறினார் என்றார்.

விசுவாசத்தை மற்றவர்க்கு வழங்குதல் என்பது ஒன்று, அடுத்தது, விசுவாசம் பற்றிய காரியங்களைக் கற்பிப்பது என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, விசுவாசம் ஒரு கொடையாகும், அதைப் படிப்பினால் பெற இயலாது, விசுவாசம் பற்றிப் படிப்பவர்கள் அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்காகப் படிக்கின்றனர் என்றும் கூறினார்.

விசுவாசம் தூய ஆவியாரின் கொடை, இது ஒரு குடும்பத்தில் பாட்டிமார் மற்றும் தாய்மாரின் நற்பணிகளால் பிறருக்கு வழங்கப்படுகிறது, இதைப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று, இன்று சிந்திப்போம் எனவும் திருத்தந்தை கூறினார்.

நாம் விரும்புவது அனைத்தையும் நம்மால் செய்ய இயலாது என்பதை மெய்ஞானத்தின் தூய ஆவியார் அறிவார், எனவே உறுதியான விசுவாசத்தை, சூழலுக்கேற்ப மாறக் கூடாத ஒரு விசுவாசத்தை நாம் பெறுவதற்கு ஆண்டவரிடம் வரம் கேட்போம் என்று மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.