2015-01-26 15:53:00

வாரம் ஓர் அலசல் – அனுபவங்கள் பாடமாகட்டும்


சன.26,2015. Harry Bibring என்பவருக்கு வயது 90. யூதரான இவர், 1939ம் ஆண்டில் வியன்னாவிலிருந்து சிறார் அகதியாக இலண்டன் வந்தவர். 1930களில் ஜெர்மனியின் நாத்சிகளால் வியன்னாவில் யூதர்கள் எதிர்நோக்கிய துன்பங்களை, இம்மாதத்தில் இலண்டனில் ஒரு பள்ளியில் இவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

Kristallnacht எனப்படும் ஜெர்மனியின் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களில் எனது தந்தையின் கடை அடித்து நொறுக்கப்பட்டது. யூதர்களின் தொழுகைக்கூடங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. யூதர்கள் கட்டாயமாக தெருவுக்கு இழுத்து வரப்பட்டு காலால் மிதித்து உதைக்கப்பட்டனர். அவர்களின் தலைமுடிகளையும், தாடியையும் பிடித்து இழுத்தனர். ஒரே இரவில் யூத ஆண்களையெல்லாம் பிடித்துச் சென்றனர். இவற்றையெல்லாம் என் கண்களால் பார்த்தேன். நானும் பிற யூதச் சிறாரும் பள்ளி செல்வது நிறுத்தப்பட்டது. ஆசிரியர்களும் அதிகாரிகளுக்குப் பயந்து எங்களைப் புழுக்கள்போல் நடத்தினர். கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர். யூதரல்லாத எனது பள்ளி நண்பர்களும் என்னோடு பேசுவதை சிறிது சிறிதாக நிறுத்தி, என்னைப் பார்த்தாலே ஒளிந்து கொண்டனர். அன்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. கல்வியறிவுமிக்க ஆசிரியர்கள்கூட இந்த அநியாயத்தை எதிர்க்கவில்லையே என்று, இத்தனை ஆண்டுகள் கழித்தும் அது ஒரு கேள்வியாகவே என்னில் இருக்கிறது. எனது பெற்றோர் என்ன ஆனார்கள் என்பதே தெரியாது....

Bibring மேலும் சொன்னார்- யூதஇன வெறுப்பு அட்டூழியங்கள் நடந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் உலகில் பிற நாட்டவர் மற்றும் பிற இனத்தவர்க்கு எதிராக முற்சார்பு எண்ணங்கள் உள்ளன, வேறுபட்ட நிறத்தை, வேறுபட்ட வாழ்வுமுறையைக் கொண்டவர்கள் என்பதற்காக நாடுகளில் மனிதர் பாகுபடுத்தப்படுகின்றனர் என்று. அன்பர்களே, 90 வயது Harry Bibring அவர்களின் கசப்பான அனுபவங்கள் போன்று, நாத்சி அடக்குமுறைகளுக்குத் தப்பிப் பிழைத்த பலர் தங்கள் அனுபவங்களைப் பள்ளிகளிலும், கூட்டங்களிலும் பகிர்ந்துகொண்டு இனிமேல் உலகில் இப்படிப்பட்ட இனப்படுகொலைகள் வேண்டாம் என அழைப்பு விடுத்து வருகின்றனர். ஏனெனில் இரண்டாம் உலகப்போரின்போது, நாத்சி ஜெர்மனியிலும், ஜெர்மனி ஆக்ரமித்திருந்த பிற பகுதிகளிலும், 1941க்கும் 1945க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் யூதர்கள் குறிவைத்து திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டனர். இப்படிக் கொல்லப்பட்ட யூதர்கள் மட்டும் அறுபது இலட்சம். 1942ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஐரோப்பா எங்கும் படுகொலைகள் கட்டவிழ்க்கப்பட்டு, அடுத்த 11 மாதங்களில் 45 இலட்சம் மனித உயிர்கள் கொல்லப்பட்டன. இவ்வெண்ணிக்கை, இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது, ஏறக்குறைய எழுபது இலட்சம் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களில் 15 இலட்சம் பேர் சிறார்.

நவீன கால வரலாற்றில் இடம்பெற்ற இந்த மிகப்பெரிய இனப்படுகொலையில் உலகம் அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், மனிதர்களில் இனவெறிகள் இன்றளவும் அடங்கவே இல்லை. ஆசியாவின் கம்போடியாவில் 1975க்கும் 1979ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கெமர் ரூஜ் கம்யூனிச ஆட்சியில் நடத்தப்பட்ட படுகொலையில் 15 இலட்சம் முதல் 30 இலட்சம் பேர் வரைக் கொல்லப்பட்டனர். அடுத்து ஆப்ரிக்காவின் ருவாண்டா நாட்டில் 1994ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியிலிருந்து ஏறக்குறைய நூறு நாள்கள் இடம்பெற்ற இனப்படுகொலையில் பத்து இலட்சம் பேர் வரையும், அடுத்து போஸ்னியாவில் 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை இடம்பெற்ற இனப்படுகொலையில் ஏறக்குறைய 35 ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நம் வாயால் சொல்ல முடியாது. இப்படி உலகில் சண்டைகளும் படுகொலைகளும் பல இடங்களில் தொடர்ந்து இடம்பெற்றுத்தான் வருகின்றன.

இஞ்ஞாயிறன்றுகூட, வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மாய்துகுரி நகரில் தாக்குதல் நடத்தியுள்ளனர். நைஜீரியாவில் மேற்கத்திய கல்வி முறையை எதிர்த்து 2002ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட போக்கோ ஹராம் அமைப்பு, குறைந்தது 200 பள்ளிச் சிறுமிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களைக் கடத்தியுள்ளது. பல கிறிஸ்தவ ஆலயங்களை அழித்துள்ளது மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள்  கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகள் Haruna Yukawa என்ற ஜப்பானியரைக் கடத்திக் கொலைசெய்துள்ளது குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்னும், உக்ரேய்ன் நாட்டின் கிழக்கில் இரஷ்ய ஆதரவுப் புரட்சியாளர்கள் இச்சனிக்கிழமையன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உக்ரேய்னில் இடம்பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, உரையாடல்மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் மிகவும் உருக்கத்துடன் அழைப்பு விடுத்தார்.

சனவரி 27, இச்செவ்வாய், யூதஇனப் படுகொலைகளில் பலியானவர்களை நினைவுகூரும் உலக தினம். “விடுதலை, வாழ்வு, யூதஇனப் படுகொலையில் தப்பி உயிர்வாழ்வோரின் மரபுரிமைப் பண்புகள்” என்ற தலைப்பில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆரம்பம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளின் எழுபதாம் ஆண்டு நிறைவு இந்த உலக தினத்தோடு ஒத்து வருகின்றன. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், 1945ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐ.நா. நிறுவனம், யூதஇனப் படுகொலைகளால் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையை உருவாக்கி அதை உலக அளவில் அமல்படுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தபோது, 1944ம் ஆண்டு ஜூலையில் போலந்திலுள்ள Maidanek முகாமும், 1945ம் ஆண்டு சனவரி 21ம் தேதி Auschwitz முகாமும் சோவியத் படைகளாலும், அதே ஆண்டு ஏப்ரலில் இன்னும் இரண்டு முகாம்கள் பிரிட்டன் (Bergen-Belsen) மற்றும் அமெரிக்கப் படைகளால் (Dachau) விடுதலை செய்யப்பட்டன. Auschwitz-Birkenau நாத்சி வதைப்போர் முகாம் விடுவிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு கடந்த புதனன்று ஐ.நா. தலைமையகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா. உதவி பொதுச் செயலர் யான் எலியாசன், உலகில் இடம்பெற்ற படுகொலைகளால் கற்றுக்கொண்ட பாடங்கள், அவற்றுக்கான காரணங்கள், அவை ஏற்படுத்திய கடும் விளைவுகள் போன்றவற்றை அறிந்த பின்னரும், உலகில் தொடர்ந்து இடம்பெறும் படுகொலைகளை உலகினர் தடுக்க இயலாமல் இருப்பது குறித்து சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

இந்நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான போலந்து நாட்டுத் தூதுவர் Boguslaw Winid அவர்கள், நாத்சிக் கொள்கைகளால் மற்ற இனங்களைச் சார்ந்த மேலும் அறுபது இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர், இவ்வுலகின் அனைத்து சமய மற்றும் இன வெறுப்புகள் ஒழிய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மத்திய கிழக்கில் இடம்பெறும் தீவிரவாத நடவடிக்கைகளால் அப்பாவி மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர், அதோடு நிர்க்கதியாய் தங்களின் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து இன்னும் உலகினர் பாடம் கற்கவில்லை. ஆயுதங்களும் அணுஆயுதங்களும் தூக்குவதற்கு மனிதக் கைகள் இன்னும் சோர்வடையவில்லை. இத்தகைய சண்டைகள் தவிர பாலியல் வன்கொடுமைகள், குடும்பச் சண்டைகள், போட்டி பொறாமைகள், பழிக்குப்பழி ... இப்படி பல தீமைகளாலும் அப்பாவி மனித உயிர்கள் தினமும் பலிகடா ஆகுகின்றன.

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள், இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடூரக் கற்பழிப்புகள், கொலைகள், மானபங்கப்படுத்துதல், கடத்தல், வரதட்சணை சாவுகள் ஆகியவை சொந்த வீட்டில்கூட பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன, மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய நூற்றாண்டை இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். ஆனால் மகாத்மாவிடமிருந்து நாம் இன்னும் பாடம் கற்கவில்லை. பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் மட்டுமே நாடு உலக சக்தியாக உருவெடுக்கும். பெண்களின் மரியாதையைப் போற்ற வேண்டும் என அனைத்து இந்தியர்களும் உறுதி பூண வேண்டும். 1915ம் ஆண்டு அவர் கண்களை நன்றாக திறந்து வாயை மூடி அமைதியாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார். இதனை நாம் பின்பற்ற வேண்டும்... எனக் கூறினார்.

1901ம் ஆண்டு கொல்கத்தாவில் ரிப்பன் கல்லூரியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அங்கு மகாத்மா சென்ற போது, மாநாடு நடக்கும் இடம் குப்பையாகக் காணப்பட்டது. அப்போது மகாத்மா காந்தி, யாரையும் எதிர்பார்க்காமல், அவரே துடைப்பத்தை எடுத்து தூய்மைப்படுத்தினார். இப்படி பெரியவர்கள் அல்லது நம் வாழ்க்கை, கற்றுத்தரும் பாடங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதற்கு நம்மிடம் உண்மையான நல்ல மனது இல்லை. அனுபவங்கள் சொல்லித்தரும் பாடங்களைக் கற்பதற்கு நம்மிடம் திறந்த மனது இல்லை. நமது சுயகர்வமும், தன்முனைப்பும், தான் என்ற அகந்தையும் இவற்றுக்குத் தடைக் கற்களாக உள்ளன.

ஒரு நாள் உப்பு பொம்மை ஒன்று தான் யார் என்று அறிய ஆசைப்பட்டது. எதிரில் வந்த பறவைகளிடம் கேட்டது. நீ ஓர் உப்பு பொம்மை என்று பறவைகள் கூறின. அப்படியானால் எனது சுவை என்ன, என்னை நான் எங்கு காண்பது என்ற கேள்வியோடு விடைதேடி  அலைந்தது அப்பொம்மை. வழியில் ஒரு பசு, உன் சுவை உப்பு என்றது. அந்தச் சுவை எப்படி இருக்கும் என்று மனிதனைக் கேட்டது அப்பொம்மை. நீதான் உப்பு, உப்புதான் நீ என்றார் மனிதர். இதில் திருப்தியடையாத உப்புப் பொம்மை கடற்கரையில் அமர்ந்து கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டு, நான் யார், என் சுவை என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது கடல் அலைகள் இந்தப் பொம்மை மீது பட்டன. உடனே அதனை தனது நாக்கில் வைத்துப் பார்த்த அந்தப் பொம்மை, அட இது நம்மைப் போன்ற சுவையாக இருக்கிறதே என்று நினைத்து, கடலைப் பார்த்து, நீ யார் என்று கேட்டது. நான் யார் என்று தெரிய வேண்டுமானால், வந்து பார் என்றது கடல். உப்பு பொம்மையும் மெல்ல மெல்ல கடலில் அடியெடுத்து வைத்தது, தான் யார் என்பதையும் அறிந்தது.

தன்னை இழந்ததில் தன்னை யார் என்று அறிந்தது உப்பு பொம்மை. அன்பர்களே, நம்மிலுள்ள அனைத்துத் தடைகளையும் அகற்றும் அறிவு, தான் யார் என்று புரிந்துகொள்ளும் அறிவு. நம்மைப் பற்றிய சுய அறிவில் வளர்ந்து, அனுபவங்கள் புகட்டும் பாடங்களைக் கற்று வாழ்வில் உயர்வடைவோம்.     

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.