2015-01-26 15:29:00

மோதல்களுக்கு மதத்தை ஒருபோதும் காரணமாகக் காட்டக் கூடாது


சன.26,2015. மதம், மோதல்களுக்கு ஒருபோதும் காரணமாகக் காட்டப்படக் கூடாது என்றும், மக்களின் இதயங்களை வேதனைப்படுத்தும் அரசியல் உரை இந்தியாவின் பாரம்பரிய உயரிய நன்னெறிகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்றும் கூறினார் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள், இஞ்ஞாயிறன்று நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, நாவின் வன்முறை மக்களின் இதயங்களை வேதனைப்படுத்துகின்றது என்று கூறினார்.

மதம், ஒற்றுமையின் சக்தி, அதனை, மோதல்களுக்கு காரணமாக ஒருபோதும் வைக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறியதை, தனது உரையில் குறிப்பிட்டுப் பேசிய பிரணாப் முகர்ஜி அவர்கள், விவாதங்கள் இன்றி அரசு சட்டங்களை இயற்ற முயற்சிப்பதற்கு மீண்டும் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இந்நிலை, சட்டம் இயற்றும் மக்களவையின் பங்கில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மக்களவைமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் உடைத்தெறிகிறது என்றும், சட்டம் இயற்றுவதில் மக்களவையின் பங்கையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா நடத்தி வரும் போரில் உலக நாடுகள் அனைத்தும் கைகோர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார் பிரணாப் முகர்ஜி.

இதற்கிடையே, இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் 3 இடங்களில் இந்திய இராணுவத்தினர், பாகிஸ்தான் இராணுவப் படையினருடன் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்

ஆதாரம் : IANS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.