2015-01-26 15:25:00

பாரசீக மொழியில் முதல் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு


சன.26,2015. ஈரான், ஆப்கானிஸ்தான், தசகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழி பாரசீக மொழியில் (Persian) முதல் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானின் Qom நகரிலுள்ள மதங்கள் பல்கலைக்கழகத்தின் முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ள இக்கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு, இம்மாதம் 12ம் தேதி உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.

இது குறித்துப் பேசிய கிரகோரியன் பல்கலைக்கழக இறையியல் துறைத் தலைவர் அருள்பணி Dariusz Kowalczyk, ஈரானிலுள்ள வல்லுனர்கள் கிறிஸ்தவம் பற்றி வாசிக்கவும், கற்றுக்கொள்ளவும் இவ்வேடு உதவும் என்ற நம்பிக்கையத் தெரிவித்தார்.

இஸ்லாம் மதத்தின் புனித மையங்களில் ஒன்றாகிய Qom நகரில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மையங்கள் உள்ளன. இஸ்லாம் மற்றும் குரானில் சிறந்த ஏறக்குறைய அறுபதாயிரம் வல்லுனர்கள் இங்கு உள்ளனர். இவர்களில் ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் இந்து, புத்தம், யூதம், கிறிஸ்தவம் உட்பட பல்வேறு மதங்கள் பற்றி படிக்கின்றனர்.  இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பாரசீக மொழி, பிரித்தானியக் காலனி ஆதிக்கத்துக்கு முன்னர் இந்திய துணைகண்டத்தில் இரண்டாம் மொழியாக இருந்தது. இதனால் இந்தி, சிந்தி, வங்காள மொழி, உருது ஆகிய மொழிகளில் இதன் தாக்கத்தைக் காணலாம். மேலும், பாரசீக மொழி, இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில் ஓரளவிலும் பேசப்படுகிறது.

தற்போது உலகில் 7 கோடியே 50 இலட்சம் பேர் பாரசீக மொழியைப் பேசுகின்றனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.