2015-01-26 15:02:00

திருத்தந்தை-கிறிஸ்தவர்கள் என்பதாலேயே துன்புறுகின்றனர்


சன.26,2015. இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே, எல்லா கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்களில் பலர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர், இதுவே இந்நாளில் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் இரத்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை உலக கிறிஸ்தவ சபைகள் கடைப்பிடித்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவாக, இஞ்ஞாயிறு மாலை உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருவழிபாட்டை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, இது குறித்த கலந்துரையாடலில் ஈடுபடும் ஒவ்வொரு குழுவும் தனது கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முயற்சிக்கும் நுட்பமான கொள்கைமுறை உரையாடல்களின் பலன்களால் வருவது அல்ல, மாறாக, நம்மை ஒன்றிணைப்பது எது என்பதை அதிகமாகவும் முழுமையாகவும் புரிந்து கொள்வதற்கு வழிகளைத் தேடுவதாகும் என்று கூறினார் திருத்தந்தை.

வானகத்தந்தையாம் கடவுளின் அன்பு, தமது மகன் மூலம் தூய ஆவியார் வழியாக, வெளிப்படுத்தப்பட்டதைப் பகிர்ந்துகொள்வதற்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மிடையே காணப்படும் பிரிவினைகளைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்து உரையாற்றினார்.

இந்த மாலை திருவழிபாட்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் பிரதிநிதி பேராயர் Gennadios, கான்டர்பரி ஆங்கிலக்கன் பேராயரின் பிரதிநிதியான உரோமையிலுள்ள ஆயர் David Moxon உட்பட பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.