2015-01-26 15:14:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆவல் கடவுள்மீதுள்ள தாகத்தின் ஓர் அங்கம்


சன.26,2015. இயேசுவின் சீடர்களில் ஏற்படும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான ஆவல், தீமை மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் முழுமையான வாழ்வுக்குரிய தாகமாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய நாற்பதாயிரம் மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் மையப்பொருளான, "எனக்குக் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு" என்று இயேசு சமாரியப் பெண்ணிடம் கேட்ட இறைச்சொற்களை மையமாக வைத்து சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவாக, இஞ்ஞாயிறு மாலை உரோம் புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற திருவழிபாட்டில் கலந்துகொள்வதற்கும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

கடவுள் மனிதராய்ப் பிறந்ததன்மூலம் நம் தாகத்தைச் சுவைத்தார், அதில், தண்ணீருக்கான நம் உடல் தாகத்தை மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக, தீமை மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் முழுமையான வாழ்வுக்குரிய தாகத்தையும் சுவைத்தார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு, கடவுளின் வாக்குறுதிகளின் நிறைவாக இருக்கிறார், ஏனெனில் இவர், தூய ஆவியாருக்கு உயிருள்ள தண்ணீரை அளிப்பவர், அலைந்துதிரியும் இதயங்களின் தாகத்தையும், வாழ்வு, அன்பு, சுதந்திரம், அமைதி ஆகியவற்றுக்கான பசியையும், இறைவனுக்காக ஏங்கும் தாகத்தையும் இத்தண்ணீர் தீர்த்து வைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

நாம் நம் இதயங்களில் இந்தத் தாகத்தை எவ்வளவு அடிக்கடி பெற்றுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நாம் ஒன்றாய் இருக்க வேண்டுமென இயேசு விரும்புகிறார், ஆனால் நாம் பிளவுபட்டுள்ளோம், நம் பாவங்களும் வரலாறும் நம்மைப் பிரித்துள்ளன, நாம் ஒன்றிணைந்து வருவதற்குத் தூய ஆவியாரிடம் செபிப்போம் என்றும் கூறினார்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.