2015-01-26 15:09:00

உக்ரேய்னில் தாக்குதல்கள் நிறுத்தப்பட திருத்தந்தை வேண்டுகோள்


சன.26,2015. உக்ரேய்னில் இடம்பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, உரையாடல்மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறு மிகவும் உருக்கத்துடன் அழைப்பு விடுப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரேய்ன் நாட்டின் கிழக்கில் இரஷ்ய ஆதரவுப் புரட்சியாளர்கள் இச்சனிக்கிழமையன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இன்னும், தொழுநோயால் துன்புறுவோருடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் உலக தினம் இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டதை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தத் தொழுநோயாளர்களுடன் நம் ஒருமைப்பாட்டைப் புதுப்பிப்போம் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நோயாளர்கள் மத்தியில் பணிசெய்பவர்கள், இந்நோயை ஒழிப்பதற்கு முயற்சிப்பவர்கள் என எல்லாரையும் ஊக்கப்படுத்திய திருத்தந்தை, உலகில் அமைதி நிலவ வேண்டுமென இத்தாலிய கத்தோலிக்க கழகத்தின் சிறார் நடத்திய பேரணியில் கலந்துகொண்டவர்களைப் பாராட்டினார்.

தான் அண்மையில் பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை நினைவுகூர்ந்து, வத்திக்கான் வாளாகத்தில் தேசியக் கொடிகளுடன் நின்றுகொண்டிருந்த பிலிப்பீன்ஸ் மக்களை வாழ்த்தினார் திருத்தந்தை. இம்மக்களின் விசுவாச வாழ்வுக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.