2015-01-24 15:15:00

திருத்தந்தை - அர்ப்பண வாழ்வு செபத்தின் ஒரு கல்விக்கூடம்


சன.24,2015. திருப்பீட துறவிகள் பேராயம் நடத்தும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் 50 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில்(கன்சிஸ்ட்ரி அறையில்) சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்கு, அர்ப்பண வாழ்வு வாழும் துறவிகளின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கிச் சொன்னார்.

அனைத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்பை ஏற்படுத்துவதற்கு, திருஅவை முழுவதிலும், அருள்பணியாளர்களோ, பொதுநிலையினரோ அனைவரிலும் ஆர்வம் இருக்கின்றது, ஆயினும், அர்ப்பண வாழ்வு வாழும் துறவிகள், இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணியை ஆற்றுவதற்குச் சிறப்பு அழைப்பு பெற்றுள்ளனர் என்பதை எந்தவிதச் சந்தேகமுமின்றிச் சொல்ல முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

பல்வேறு துறவறக் குழுக்கள் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன, பல்வேறு மரபுகளைக் கொண்ட கிறிஸ்தவர்கள் சந்திப்பதற்கு சிறந்த இடங்களும் உள்ளன, இதில் டேஜே மற்றும் போசே கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுக்களைக் குறிப்பிட விரும்புவதாகவும் கூறினார் திருத்தந்தை.

மனமாற்றம் இன்றி, செபம் இன்றி, வாழ்வில் புனிதம் இன்றி ஒன்றிப்பு கிடையாது என்றும், அர்ப்பண வாழ்வு செபத்தின் ஒரு கல்விக்கூடம் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு பெற்றுள்ள அனைவரும் புனித வாழ்வு வாழ அழைக்கப்பட்டு இருப்பதை உணர்த்துவதற்கு அர்ப்பண வாழ்வு உதவும் என்றும் கூறினார்.

உரோம் அகுஸ்தீனியானம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

மேலும், அர்ப்பண வாழ்வு வாழ்வோர் தினமான பிப்ரவரி 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.