2015-01-24 15:46:00

இதயத்திலிருந்து பேசும்போது,அது கேட்பவரின் வாழ்வைத் தொடுகிறது


சன.24,2015. ஒருவர் இதயத்திலிருந்து பேசும்போது, அவர் கேட்பவரின் வாழ்வைத் தொடுகிறார், அதேநேரம், ஒருவர் வாயிலிருந்து பேசும்போது, அவர் பேசுவதைக் காதுகள் மட்டுமே கேட்கும் என்று திருப்பீட சமூகத் தொடர்புத் துறைத் தலைவர் பேராயர் Maria Claudio Celli அவர்கள் கூறினார்.

எழுத்தாளர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் விழாவான இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் வானொலியில் பேசிய பேராயர் Celli அவர்கள்,  புனித பிரான்சிஸ் டி சேல்ஸ், தனது போதனைகளிலும், எழுத்துகளிலும் எப்போதும் தனது இதயத்திலிருந்து பேசினார் என்று கூறினார். 

ஊடகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய பேராயர் Celli அவர்கள், இப்புனிதரின் காலத்தில் வானொலிகளோ, சமூக வலைத்தளங்களோ கிடையாது, ஆயினும் அவர் அக்காலத்திய ஊடகத்தை நன்முறையில் பயன்படுத்தினார் என்றும் கூறினார்.

ஊடகங்கள், மக்களிடையே சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதைக் குறிப்பிட்ட பேராயர் Celli அவர்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களும் ஒரே கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் என்று கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.