2015-01-23 16:29:00

நைஜரில் திருஅவை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு


சன.23,2015. சார்லி ஹெப்தோ வார இதழ் விவகாரம் தொடர்பாக, நைஜர் நாட்டில் ஆலயங்களும் துறவு இல்லங்களும் சூறையாடப்பட்டு, ஆலயங்களின் புனிதத்தை மாசுபடுத்திய செயல்கள் இடம்பெற்றதையொட்டி அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை தனது நடவடிக்கைகளை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

சார்லி ஹெப்தோ ப்ரெஞ்ச் வார இதழில் வெளியான இஸ்லாம் குறித்த செய்திகளையொட்டி நைஜர் நாட்டில் இடம்பெற்ற வன்முறை நடவடிக்கைகளில் பல்வேறு ஆலயங்களும், துறவு இல்லங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன என்று நைஜர் ஆயர்கள் தகவல் அனுப்பியுள்ளதாக பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

வன்முறை நடவடிக்கைகளால் இந்நாள்களில் தாங்கள் அனுபவித்துள்ள வேதனைகள்,  மன அமைதியுடன் செபிக்கவும், வாசிக்கவும் உதவியுள்ளன என்றும் கூறியுள்ள ஆயர்கள், தங்களின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு ஒருமைப்பாட்டுணர்வு காட்டிய எல்லாருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட திருஅவைத் தலைவர்களில் பலர் நைஜர் தலத்திருஅவைக்குத் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிசிலிருந்து பிரசுரமாகும் சார்லி ஹெப்தோ வார இதழ், மதங்களையும் அரசியலையும் கிண்டல் செய்து செய்திகளையும், படங்களையும் வெளியிட்டு வருகின்றது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் 94 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முஸ்லிம்கள்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.