2015-01-23 16:37:00

இந்தியா-பள்ளிக்குச் செல்லும் சிறாரின் எண்ணிக்கை அதிகரிப்பு


சன.23,2015. தெற்காசிய நாடுகளில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் குழந்தைகளின்  எண்ணிக்கைக் குறைந்துள்ளது என்றும், 2000த்துக்கும் 2012ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு கோடியே அறுபது இலட்சமாகக் குறைத்துள்ளது என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

தெற்காசியாவில் பள்ளிக்குச் செல்லாத சிறார் பற்றி, யுனெஸ்கோ எனப்படும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பும், யூனிசெப் எனப்படும் குழந்தை நல நிதியமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இன்னும் 14 இலட்சம் சிறார் ஆரம்ப்ப் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர் என்றும் கூறியுள்ளது.

2000த்துக்கும் 2012ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தெற்காசியாவில், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2 கோடியே 30 இலட்சமாகக் குறைந்தது  என்றும், இந்த வீழ்ச்சிக்கு இந்தியாவுக்குப் பெரும் பங்கு உள்ளது என்றும், இக்குழந்தைகளின் எண்ணிக்கையில் ஒரு கோடியே 60 இலட்சம் பேர் இந்தியக் குழந்தைகள் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியா, புருண்டி, கம்போடியா, கானா, இந்தியா, ஈரான், மொராக்கோ, நேபாளம் போன்ற, 42 நாடுகளில், பள்ளி செல்லாக் குழந்தைகள் எண்ணிக்கை, இந்த 12 ஆண்டுகளில், பாதியளவு குறைந்துள்ளது.

எனினும், 2012ல், உலகம் முழுவதும் உள்ள சிறுவர், சிறுமியரில், 8 விழுக்காட்டுச் சிறுவர்களும், 10 விழுக்காட்டுச் சிறுமியரும் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.