2015-01-23 16:33:00

அர்ஜென்டினா-வழக்கறிஞர் கொலையில் புலன் விசாரணைக்கு அழைப்பு


சன.23,2015. அர்ஜென்டினா நாட்டில் தலைமை வழக்கறிஞர் கொலைசெய்யப்பட்டுள்ளது தொடர்பாக, உண்மையை அறியும் நோக்கத்தில் புலன் விசாரணைகள் நேர்மையுடன் நடத்தப்பட வேண்டுமென்று அந்நாட்டு ஆயர்கள் அனைத்து அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் கேட்டுள்ளனர்.

தலைமை வழக்கறிஞர் Alberto Nisma  அவர்கள், இம்மாதம் 19ம் தேதி அவரது வீட்டில் தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்தார். இதே நாளில் இவ்வழக்கறிஞர் நாடாளுமன்றத்தில், அர்ஜென்டினா அரசுத்தலைவர் Cristina Kirchner அவர்கள் குறித்த குற்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்கவிருந்தார்.

அர்ஜென்டினா ஆயர் பேரவையின் உயர்மட்டக் குழு வெளியிட்ட அறிக்கையில், இக்கொலைக் குற்றவாளிகளுக்குத் தண்டனையிலிருந்து விலக்கீடு கொடுத்தால் அது நாட்டின் மக்களாட்சிப் பண்பைச் சேதப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டில் அந்நாட்டின் AMIA யூதக் கழகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்வு தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட சில இரானியக் குடிமக்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கீடு கொடுப்பதை உறுதிசெய்வதற்கு, அர்ஜென்டினா அரசுத்தலைவர் Cristina Kirchner அவர்கள் ஓர் இரகசிய உடன்பாட்டுக்குப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டார் என்பதே அக்குற்றச்சாட்டு.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.