2015-01-22 17:01:00

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனைகள் தொடர்கின்றன


சன.22,2015. தென்கிழக்கு ஆசியாவில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் பழக்கம் தொடர்ந்து இடம்பெற்று வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.வின் மனித உரிமைகள் நிறுவனம்.

UNHCHR என்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Ravina Shamdasani இது குறித்துப் பேசுகையில், மரண தண்டனை வழங்கும் பழக்கத்தை இரத்துசெய்யுமாறும், மன்னிப்பு கேட்டுச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்ப மனுக்களையும் விரிவான மறுபரிசீலனை செய்யுமாறும் இந்தோனேசிய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விடப்பட்ட வேண்டுகோள்களையும் புறக்கணித்து இந்தோனேசிய அரசு கடந்த ஞாயிறன்று ஆறு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

அனைத்துலக குடிமக்கள் மற்றும் அரசியல் ஒப்பந்தத்தில் இந்தோனேசிய அரசு கையெழுத்திட்டுள்ளது எனவும், இதன்படி, மரண தண்டனை கைதிகள் யாராய் இருந்தாலும், அவர்கள் மன்னிப்புக்கு விண்ணப்பிக்க அல்லது தண்டனை காலம் குறைக்கப்பட்டு மாற்றம் பெறுவதற்கு உரிமை கொண்டுள்ளனர் என்றும் Shamdasani கூறினார்.

தற்போது உலகில் அதிகமான மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளாக சீனா, ஈரான், ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஏமன், சூடான் என்று  வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.