2015-01-22 16:35:00

திருத்தந்தை – இயேசு நம் மீட்பர், நமக்காகப் பரிந்து பேசுபவர்


சன.22,2015. இயேசு ஆற்றும் மிக முக்கியமான செயல், நமக்கு குணமளிப்பதோ அல்லது நமக்கு போதிப்பதோ அல்ல, மாறாக, நம்மை மீட்பதும், நமக்காகப் பரிந்து பேசுவதுமே என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவிடம் குணம் பெறுவற்காக எல்லாப் பகுதிகளிலிருந்தும் பெருந்திரளாக மக்கள் வந்து அவர்மீது விழுந்துகொண்டிருந்ததை விளக்கும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை (மாற்.3:7-12) மையமாக வைத்து, இவ்வியாழன் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இயேசு நம் மீட்பர், இன்று, இந்த நேரத்தில் நம் மீட்பராக, நமக்காகப் பரிந்து பேசுபவராக அவர் இருக்கிறார், நாம் மீட்கப்பட்டுள்ளோம், நமக்கு ஒரு மீட்பர் இருக்கிறார், இயேசு, தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்துகொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பதில் நம் கிறிஸ்தவ வாழ்வு அதிகமாக உறுதிப்படுவதாக என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த உண்மைகளைப் புரிந்துகொள்வதற்கு தூய ஆவியார் நமக்கு உதவுவாராக   என்றும் கூறிய திருத்தந்தை, தமது வானகத் தந்தையிடம் சென்ற இயேசு, இன்றும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்றும் கூறினார்.

இறைமக்கள் ஆண்டவர் இயேசுவில் ஒரு நம்பிக்கையைக் கண்டுகொள்கின்றனர், ஏனெனில் இயேசு செயல்படும் முறையும், அவரின் போதனையும் இறைமக்களின் இதயங்களைத் தொடுகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

சட்ட வல்லுனர்கள் விசுவாசத்தைப் பற்றிப் போதிப்பதைக் கேட்டு சற்று சலிப்படைந்த மக்கள், இயேசுவின் மலைப்பொழிவையும், இயேசுவையும் பார்த்துக் கேட்டு தங்கள் உள்ளத்தில் ஏதோ உணர்ந்து அவரிடம் ஈர்க்கப்பட்டனர், அவர்களில் இருந்த தூய ஆவியார் அவர்களைத் தட்டி எழுப்பினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.