2015-01-22 16:43:00

சமயச் சார்பற்ற இந்தியாவைக் காப்பதற்கு பிரதமருக்கு அழைப்பு


சன.22,2015. இந்தியாவின் சமயச் சார்பற்ற தன்மைக்குச் சவால் விடுக்கும் நடவடிக்கைகளில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக தலையிட்டு  அவற்றை நிறுத்த வேண்டுமென இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதுடெல்லியில் இத்திங்களன்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் கத்தோலிக்கோஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வேண்டுகோள் விடப்பட்டது.

சமயச் சார்பற்ற இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை முன்வைக்கும் நிகழ்வுகள்  நிறுத்தப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக தலையிட்டு, சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள்  கேட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற கவலைதரும் நிகழ்வுகள் கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளன என்றுரைக்கும் இப்பிரதிநிதிகள், இத்தகைய நிகழ்வுகள், நம் நாட்டின் சமயச் சார்பற்ற தன்மையில் கொண்டிருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன என்றும் கூறினர்.

மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், இராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ, சீரோ-மலபார் திருஅவைத் தலைவர் கர்தினால் ஜார்ஜ் அலெஞ்ச்சேரி உட்பட துறவற மற்றும் பொதுநிலையினர் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : CBCI








All the contents on this site are copyrighted ©.