2015-01-22 16:56:00

எச்சரிப்புக்களையும் மீறி உலகில் படுகொலைகள் தொடர்கின்றன,ஐ.நா.


சன.22,2015. உலகில் இடம்பெற்ற படுகொலைகளால் கற்றுக்கொண்ட பாடங்கள், அவற்றுக்கான காரணங்கள், அவை ஏற்படுத்திய கடும் விளைவுகள் போன்றவற்றை அறிந்த பின்னரும், உலகில் தொடர்ந்து இடம்பெறும் படுகொலைகளை உலகினர் தடுக்க இயலாமல் இருப்பது குறித்து சிந்திக்குமாறு கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி அமைத்திருந்த Auschwitz-Birkenau நாத்சி வதைப்போர் முகாம் விடுவிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா. உதவி பொதுச் செயலர் யான் எலியாசன் இவ்வாறு கூறினார்.

எச்சரிக்கை அடையாளங்களைப் புறக்கணிக்கும்போதும், பதில் நடவடிக்கை எடுப்பதற்கு  விருப்பம் காட்டாதபோதும் மட்டுமே படுகொலைகள் இடம்பெற முடியும் என்று நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றினார் எலியாசன்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ருவாண்டா நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து இந்நிகழ்வில் பேசிய அந்நாட்டுப் பிரதிநிதி, யூத இனப் படுகொலைக்குப் பின்னர், ஏன் இன்னும் உலகில் படுகொலைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்ற கேள்வியை எழுப்பினார்.

Auschwitz-Birkenau நாத்சி வதைப்போர் முகாம் விடுவிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு, 2015ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது.   

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.