2015-01-21 16:58:00

நைஜீரியாவில் வன்முறைகளால் சிறார் பெருமளவில் பாதிப்பு


சன.21,2015. நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைத் தாக்குதல்களால் புலம்பெயரும் மக்களில் பெண்களும் சிறாருமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் குழந்தை நல நிதியமான யூனிசெப் கூறியது.

சுத்தமான தண்ணீர், ஊட்டச்சத்துணவு, கல்வி, நலவாழ்வு உதவிகள், பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைச் சிறாருக்கு வழங்கி வருவதாகக் கூறிய யூனிசெப் நிறுவனம், நைஜீரியாவில் இடம்பெறும் தாக்குதல்களில் சிறாரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியது.

போக்கோ ஹாரம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் Bagaவில் நடத்திய அண்மைத்  தாக்குதல்களால், அப்பகுதியின் மனிதாபிமான நெருக்கடிகள் மேலும் மோசமடைந்துள்ளன என்றும், அப்பகுதியில் ஏற்கனவே 10 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 1,35,000த்துக்கு மேற்பட்ட மக்கள் காமரூன், சாட், நைஜர் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும் ஐ.நா. கூறியது

காமரூனில் வாழும் 25 ஆயிரம் நைஜீரியப் புலம்பெயர்ந்துள்ள மக்களில் அறுபது விழுக்காட்டினர் சிறார் என்றும் யூனிசெப் கூறியது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.