2015-01-21 16:52:00

நைஜீரியாவில் வன்செயல்களை நிறுத்த மேற்குலக உதவி தேவை


சன.21,2015. நைஜீரியாவில் போக்கோ ஹாரம் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு நிறுத்துவதற்குத் தவறியுள்ளவேளை, தீவிரவாதிகளின் செயல்களை நிறுத்துவதற்கு மேற்கத்திய இராணுவத் தலையீட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் ஒருவர்.

மனிதர்களை உயிரிழக்க வைக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கடும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன, அதோடு, இத்தீவிரவாதிகள் தங்களின் அமைப்புக்கு வட ஆப்ரிக்காவின் பிற நாடுகளிலிருந்தும் ஆட்களைச் சேர்க்கின்றனர் என்றுரைத்த மாய்துகுரி ஆயர் ஆலிவர் தோமே அவர்கள், போக்கோ ஹாரம் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு மேற்கத்தியத் தலையீடு அவசியம் என்று கூறினார்.

Aid to the Church in Need கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ள ஆயர் தோமே அவர்கள், தனது மாய்துகுரி மறைமாவட்டத்தின் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கத்தோலிக்கரில் ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும், போக்கோ ஹாரம் தீவிரவாதிகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்களை அழித்துள்ளனர் மற்றும் இவர்களின் வன்முறையால் இருநூறுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கைவிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.