2015-01-21 16:42:00

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்குக்குச் செபம்


சன.21,2015. தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால், கடுமையான மற்றும் தொடர் அடக்குமுறைகளை எதிர்கொண்டுவரும் மத்திய கிழக்குப் பகுதிக்கு, குறிப்பாக, ஈராக், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அமைதி கிடைக்கும்படியாகச் செபிக்குமாறு கேட்டுள்ளனர் லெபனான் கிறிஸ்தவத் தலைவர்கள்.

உலகின் கிறிஸ்தவ சபைகள் இவ்வாரத்தில் கடைப்பிடித்துவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்துக்கென லெபனான் கிறிஸ்தவ முதுபெரும் தந்தையரும், கிறிஸ்தவத் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ செபிக்குமாறு கேட்டுள்ளனர்.

அமைதியை விரும்பும் மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள் தங்களின் விசுவாசத்துக்காகக் கொல்லப்படுகின்றனர், அவர்களின் வீடுகள் சூறையாடப்படுகின்றன, இதனால் அனைத்தையும் விட்டுவிட்டு அவர்கள் வேறு இடங்களுக்கு கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர் என்றும் அத்தலைவர்களின் செய்தி கூறுகிறது.

“குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடும்”(யோவா.4,7-8) என்ற தலைப்பில்  இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் 18ம் தேதி முதல் புனித பவுல் மனந்திரும்பிய விழாவான 25ம் தேதி வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.