2015-01-21 11:35:00

திருத்தந்தை - கடவுளின் பெயரால் வன்முறையில் ஈடுபடக் கூடாது


சன.21,2015. வன்முறை, அடக்குமுறை, அழிவு ஆகியவற்றுக்கு சமய உணர்வுகள் ஒருபோதும் இட்டுச் செல்லக் கூடாது என்று அழைப்புவிடுத்த அதேவேளை, நைஜர் நாட்டில் அண்மை நாள்களில் நடந்த வன்முறைகளில் பலியானவர்களுக்காகச் செபிப்போம் என்று இப்புதன் பொது மறையுரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நைஜர் நாட்டில் அனைத்து மக்களின் நலன் கருதி, ஒருவர் ஒருவரையொருவரை மதிக்கும் மற்றும் அமைதியான ஒன்றிணைந்த வாழ்வுச் சூழல் விரைவில் உருவாக்கப்படும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சார்லி ஹெப்தோ(Charlie Hebdo) ப்ரெஞ்ச் வார இதழ், இறைவாக்கினர் முகமது அவர்களைக் கேலியாக சித்திரிக்கும் நையாண்டிப் படங்களை வெளியிட்டது தொடர்பாக, நைஜரில் 45 கிறிஸ்தவ ஆலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. இவ்வன்முறையில் குறைந்தது பத்துப்பேர் இறந்துள்ளனர். மேலும், இவ்வன்முறையில், பயணியர் விடுதிகளும் கடைகளும், ஒரு பள்ளியும், ஒரு கருணை இல்லமும் தீயினால் அழிந்துள்ளன.

மேற்கு ஆப்ரிக்க நாடாகிய நைஜரின் 75 இலட்சம் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். 

இம்மாதம் 7ம் தேதி சார்லி ஹெப்தோ அலுவலகம் வன்முறையால் தாக்கப்பட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஏமனில் இயங்கும் அல்கெய்தா அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.