2015-01-20 16:08:00

புனித பூமி கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஒன்றிப்பு முக்கியம்


சன.20,2015. புனித பூமியிலுள்ள கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது மிக மிக முக்கியம் என்று தென்னாப்ரிக்காவின் கேப்டவுண் பேராயர் Stephen Brislin அவர்கள் கூறினார்.

இம்மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Brislin அவர்கள்,  புனித பூமியிலுள்ள கிறிஸ்தவச் சமூகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்கள் குறித்து விளக்கியபோது இவ்வாறு கூறினார்.

புனித பூமியிலுள்ள கிறிஸ்தவச் சமூகத்துடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் அப்பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள பேராயர் Brislin அவர்கள், நம் அனைவருக்கும் கவலை தருகின்ற விவகாரங்கள் குறித்துச் செயல்படுவதற்கு கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பு மிகவும் முக்கியம் என்று கூறினார்.

“குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடும்” (யோவா.4,7) என்பது இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் மையப்பொருளாகும்.

மேலும், வறுமையும், துன்பங்களும் மத்திய கிழக்குப் பகுதியை உறுதியற்ற நிலைக்கு உட்படுத்தி வருகின்றன, வளர்ச்சி குறைவாக உள்ள இடத்தில் அமைதி இருக்க இயலாது என்று மாரனைட் முதுபெரும் தந்தை பூத்ரோஸ் ராய் அவர்கள் கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.