2015-01-20 15:00:00

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை - பகுதி 2


புத்தாண்டின் முதல் வார விவிலியத் தேடலில், ‘திராட்சைத் தோட்ட வேலையாள்கள்’ என்ற உவமையில் நம் தேடலைத் துவக்கினோம். சென்றவாரம் நம் தேடலுக்குப் பதில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கையில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில் அவருடன் இணைந்தோம். தமிழர்கள் கொண்டாடும் அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவையொட்டி திருத்தந்தை அவர்கள் இலங்கை சென்றது, குறிப்பாக, இலங்கைத் தமிழர்களை அரவணைத்துக் காக்கும் மடுமாதா என்ற பெயரைத் தாங்கிய மரியன்னையின் புகழ்பெற்ற திருத்தலத்திற்கு, பொங்கல் திருநாளன்று திருத்தந்தை சென்றது ஆகியவை, நம் மனதிற்கு நிறைவைத் தரும் நிகழ்வுகளாக அமைந்தன.

கத்தோலிக்கத் திருஅவை என்ற திராட்சைத் தோட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, கடந்த 22 மாதங்கள் அயராமல் உழைத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆசிய நாடுகளில் மேற்கொண்ட இரண்டாவது திருத்தூது பயணம் இது. திருஅவையின் எதிர்காலம், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் உள்ளது என்று அவர் அவ்வப்போது கூறிவருகிறார். அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவண்ணம், ஆசியாவின் அனைத்து நாடுகளும், அறுவடை நிறைந்த விளைநிலங்களாக, செழுமை மிகுந்த திராட்சைத் தோட்டங்களாகத் திகழவேண்டும் என்ற வேண்டுதலுடன் இன்றைய நம் தேடலைத் துவக்குவோம்.

இயேசு கூறிய ‘திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை’யை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். திராட்சைத் தோட்ட உரிமையாளர் ஒருவர், தன் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடிச்செல்வது முதல் பாதியாகவும், வேலைசெய்த தொழிலாளிகளுக்கு கூலி தருவது இரண்டாவது பாதியாகவும் அமைந்துள்ளது. உவமையின் முதல் பாதிப் பகுதிக்கு இப்போது செவிமடுப்போம்:

மத்தேயு நற்செய்தி 20: 1-7

இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். (ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.) ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

இஸ்ரயேல் மக்கள் எளிதில் கற்பனை செய்து பார்க்கக்கூடிய ஒரு காட்சியை, இயேசு தன் உவமையில் சித்திரிக்கிறார். ஊருக்கு நடுவே இருக்கும் பொதுவான ஓரிடம். விடிவதற்கு முன்னரே அங்கு ஒரு சில தொழிலாளிகள் கூடியுள்ளனர். யாராவது தங்களுக்கு வேலை தரமாட்டார்களா என்ற ஏக்கம், அவர்களை விடியற் காலையில் அந்த பொது இடத்திற்கு அழைத்து வந்துள்ளது. அன்று வேலை செய்தால்தான் தங்கள் குடும்பத்திற்கு உணவுதர முடியும் என்ற நிலை அவர்களுக்கு.

திராட்சைத்தோட்ட உரிமையாளர் அந்நேரம் அங்கு வருகிறார். அவர் மனதிலும் ஓர் ஏக்கம். அன்று மாலைக்குள் தன் திராட்சைத் தோட்டத்தில் வேலைகளை முடிக்கவேண்டும் என்ற ஏக்கம். அவர் தேடிவந்த நேரத்தில், ஊரின் பொது இடத்தில், ஒரு சிலரே இருந்ததால், அவர்கள் அனைவரையும் தன் தோட்டத்தில் வேலை செய்ய அழைக்கிறார். ஒரு நாளைக்குரிய நியாயமான கூலியான ஒரு தெனாரியம் பணத்தைத் தருவதாக உரிமையாளர் வாக்களிக்கிறார். தொழிலாளிகளும் அத்தொகைக்கு ஒப்புதல் தந்து, வேலை செய்யச் செல்கின்றனர்.

வந்திருந்த வேலையாள்களின் எண்ணிக்கை போதாது என்பதை உணர்ந்த உரிமையாளர், காலை ஒன்பது மணி, மதியம் 12, பிற்பகல் 3 என மூன்று முறை ஊரின் பொது இடத்திற்குச் சென்று ஆட்களைத் திரட்டி வருகிறார். இந்த மூன்று முறையும் அவர்களுக்கு எவ்வளவு கூலி என்பதைக் குறிப்பிடாமல், "நேர்மையான கூலியைக் கொடுப்பதாக" (மத். 20:4) வாக்களிக்கிறார். உரிமையாளரை நேரில் சந்தித்தது, வேலையாள்களிடம் நம்பிக்கையை வளர்க்கிறது. அவர்களும் தங்கள் வேலைகளைச் செய்யப் புறப்படுகின்றனர். மாலை 5 மணிக்கு, அதாவது இறுதி ஒரு மணி நேரத்திற்கு உழைப்பதற்கென்று ஆட்களைக் கொணர்கிறார். அவர்களிடம், கூலியைப் பற்றி எதுவும்  பேசாமல், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்" (மத். 20:7) என்று மட்டும் கூறுகிறார். அவர் கூறும் வார்த்தைகளைக் கேட்டால், தன் திராட்சைத் தோட்டத்தைப் பார்வையிட அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

இவ்வாறு, உவமையின் முதல் பகுதியில், நேரடியான ஆள் தேர்வு, நியாயமான கூலி ஒப்பந்தம், உழைப்பாளர்களின் கடின உழைப்பு என்று, அனைத்தும் சுமுகமாக, நியாயமான முறையில் நடைபெறுகிறது. திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களிடம் நடந்துகொண்ட முறை, தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் இடையே இன்றைய நாள்களில் நிலவிவரும், அல்லது, நிலவவேண்டிய உறவு வரைமுறைகளைச் சிந்திக்க நம்மை அழைக்கிறது.

முதலாளிகள் தங்களிடம் வேலை செய்பவர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுக்குரிய மரியாதை கொடுத்து, அவர்கள் செய்யப்போகும் வேலைகளுக்கு உகந்த ஊதியம் வழங்குவதாக வாக்களித்து, வேலை செய்ய அழைத்தால், முதலாளி, தொழிலாளி உறவில் நீண்டகால நம்பிக்கை பிறக்கும். இந்த வரைமுறைகளை மேலாண்மை நிறுவனங்கள் இன்று பாடங்களாகச் சொல்லித் தருகின்றன. ஆனால், நடைமுறை உலகில் முதலாளி, தொழிலாளிகளுக்கு இடையே நேரடி சந்திப்பு, நீதியான ஊதியம், வேலை செய்ய அழைப்பு என்ற அழகிய அம்சங்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது சந்தேகமே!

மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலையில் கதிரவன் மறையுமுன் கூலி கொடுக்கப்படவேண்டும். மோசே வகுத்த சட்டத்தில் காணப்படும் வார்த்தைகள் இதோ:

இணைச்சட்டம் 24:14-15

வறியவரும் எளியவருமான கூலியாள்கள், உன் இனத்தாராயினும் சரி அல்லது உன்நாட்டில் உன் நகர்வாயிலுக்குள் உள்ள அன்னியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே. அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது. இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார். அப்போது அது உனக்குப் பாவமாகும்.

தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் ஊதியம் பெற்றால்தான் அவர்கள் வீட்டில் உணவு இருக்கும். எனவே, அவர்களுக்கு மாலை 6 மணிக்கு கூலி கிடைத்தால்தான் அவர்களால் இரவு உணவை தன் மனைவி, மக்களுக்கு வாங்கிச் செல்ல முடியும் என்ற எண்ணத்தில் இந்தச் சட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

சட்டம் ஒன்று, நடைமுறை வேறு. பல சமயங்களில், வேலையாள்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலியை, முதலாளிகள் தாமதித்தனர், அல்லது கொடுக்க மறுத்தனர். தரவேண்டியக் கூலியைத் தராமல், வேலையாள்களை வதைப்பது பெரும் குற்றம் என்பதைக் கூறும் பல பகுதிகளை, பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நாம் காண்கிறோம். இதோ இரு எடுத்துக்காட்டுகள்:

லேவியர் நூல் 19:1,2,13

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது.

யாக்கோபு எழுதிய திருமுகம் 5:4

உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்: அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல், படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.

'கூலி' என்ற வார்த்தையும் பல சிந்தனைகளை மனதில் எழுப்புகின்றது. மனித உழைப்பிற்கு ஈடாகப் பணம் தருவது, அவரது உழைப்பைப் பாராட்டித் தரப்படும் ஒரு விருதுபோல் இருக்கவேண்டும். ஆனால், இன்றைய உலகில் தொழிலாளிகளுக்கு தரப்படும் கூலி, அவர்களுக்கு இடப்படும் பிச்சையைப் போலத் தோன்றுகிறது. ஒருவர் செய்யும் வேலைக்கு வழங்கப்படும் தொகையை, ஊதியம், சம்பளம் என்று அழைக்கும்போது அதில் ஓரளவு மதிப்பு இருப்பதை உணர முடிகிறது. ஆனால், அதே தொகையை கூலி என்று சொல்லும்போது, மதிப்பு குறைகிறது. கூலி பெறுபவர், கூனிக் குறுகி நின்று, அதைப் பெற்றுச் செல்வதுபோன்ற ஒரு காட்சி மனதில் முள்ளாகக் குத்துகிறது.

பெரும் நிறுவனங்களில், குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைகளில் நாள் முழுவதும் அமர்ந்து, கணணி வழியாக அல்லது தொலைபேசியின் உதவியுடன் வேலைகள் செய்யும் அதிகாரிகள் பெறுவது ஊதியம் அல்லது சம்பளம் என்று அழைக்கப்படும்போது, வயல்வெளிகளில், தோட்டங்களில், கல்லுடைக்கும் குவாரிகளில் நாள் முழுவதும் வெயிலிலும் மழையிலும் நின்று உடல் உழைப்பைத் தரும் வேலையாள்கள் பெறுவதை மட்டும் ஏன் கூலி என்று கூறுகிறோம்? அதிகாரிகளின் சம்பளங்கள் பல பூஜ்யங்களைக் கொண்ட தொகையாக இருக்கும்போது, தொழிலாளிகளின் கூலிகள் மட்டும் பொதுவாக இரு பூஜ்யங்களைத் தாண்டுவது இல்லையே!

இவ்வாறு, வேலை செய்யும் சூழல், அங்கு தரப்படும் மதிப்பு, உழைப்பிற்கென வழங்கப்படும் ஒரு தொகை என்று அனைத்து அம்சங்களிலும் அதிகாரிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே உருவாகியுள்ள இடைவெளி இணைக்கமுடியாத பாதாளமாக மாறிவருகிறது.

உழைப்பவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு நியாயமான கூலியும் தருவதாக வாக்களித்து வேலைக்கு அழைக்கும் திராட்சைத் தோட்ட உரிமையாளர், மாலையில் அவர்களுக்குக் கூலி தர தன் மேற்பார்வையாளரிடம் கூறுகிறார். அப்போது அங்கு ஒரு சங்கடமானச் சூழல் எழுகிறது. இந்தச் சூழலை நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம். 

விவிலியத் தேடல் நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி.








All the contents on this site are copyrighted ©.