2015-01-19 16:04:00

திருத்தந்தையின் இலங்கை, பிலிப்பீன்ஸ் திருப்பயணங்கள் நிறைவு


சன.19,2015. இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளுக்கு மேற்கொண்ட ஒரு வாரத் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிலா Villamor இராணுவ விமான நிலையத்துக்குச் சென்ற வழியெங்கும் மக்கள் வெள்ளமெனத் திரண்டு நின்று  திருத்தந்தைக்குப் பிரியாவிடை அளித்தனர்.

Villamor இராணுவ விமான நிலையத்தில் இடம்பெற்ற வழியனுப்பும் நிகழ்வில், பிலிப்பீன்சின் பல்வேறு மையங்களைச் சார்ந்த 400க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட   சிறார், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, நாங்கள் உங்களை அன்பு கூருகிறோம் என ஒரே குரலில் ஆடிப் பாடினர்.

சிவப்புக் கம்பளத்தில் பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் பெனிஞ்ஞோ அக்குவினோ அவர்களுடன் நடந்துசென்ற திருத்தந்தை, அரசுத்தலைவருக்குச் சிறப்பான விதத்தில் நன்றிசொல்ல விரும்புவதாகத் தெரிவித்து விமானத்துக்குள் நுழையும் முன்னர் படிகளில் நின்று எல்லாரையும் பார்த்து கையசைத்துச் சென்றார்.

இந்நாள்களில் அதிகமான மணி நேரங்கள் தாங்கள் வேலை செய்திருப்பீர்கள், தங்களின் இனிய வரவேற்புக்கு நன்றி என அரசுத்தலைவரிடம் கூறிய திருத்தந்தை, அங்கு நின்றுகொண்டிருந்த ஆயர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுநிலையினரிடம் தனித்தனியாக சில வார்த்தைகள் சொல்லி நன்றி கூறினார்.

பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு ஐந்து நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, வரலாறு காணாத முறையில் பெருமளவில் மக்கள் கூட்டத்தைக் கவர்ந்துள்ளார், குறிப்பாக, இஞ்ஞாயிறன்று மனிலாவின் ரிசால் பூங்காவில் கனமழையிலும் அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர். திருத்தந்தை ஒருவரின் நிகழ்வு ஒன்றில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.

ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டோருக்கென இத்திருத்தூதுப் பயணத்தை அர்ப்பணித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் மாலை 5.40 மணியளவில் உரோம் வந்தடைகிறார்.  

வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.