2015-01-19 16:34:00

உயர்ந்த இலட்சியங்களை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள்


சன.18,2015. பிலிப்பீன்சின் மனிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் இளையோருக்கு உரை ஆற்றுவதற்கு ஏற்கனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட திருத்தந்தையின் உரையின் சுருக்கம் தமிழில்...

பிலிப்பீன்ஸ் நாட்டின் கிறிஸ்தவ குடிமக்கள் என்ற முறையில், இளையோராகிய நீங்கள் உங்கள் சமுதாயத்தைப் புதுப்பிக்கும் பெரும் பணிக்கும், நல்லதோர் உலகைக் கட்டுவதற்கு உதவவும் உங்களையே அன்பு கலந்த பேரார்வத்தோடும், நேர்மையோடும்    அர்ப்பணிப்பதற்கு ஊக்கப்படுத்துகிறேன். உங்கள் நாட்டின் வாழ்வில் குறிப்பிடத்தக்க வகையில் நீங்கள் பங்கேற்பதற்கு உதவியாக, கூறுபடாநிலைக்குரிய சவால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வம், ஏழைகள்மீது அக்கறை ஆகிய மூன்று முக்கிய கருத்துக்களை இன்று பரிந்துரைக்க விரும்புகிறேன்.

சவால் என்பது இருவகைகளில் புரிந்துகொள்ளப்படலாம். முதலாவதாக, உண்மை, நல்லது மற்றும் சரியானது என நீங்கள் அறிந்துள்ள உங்களின் நன்னெறி உறுதிப்பாடுகளுக்கு எதிராகச் செயல்படுவதற்குரிய சோதனையாக அது புரிந்துகொள்ளப்படலாம். தன்னலத்தில் ஆர்வம், பேராசை, நேர்மையின்மை அல்லது  பிறரைப் பயன்படுத்துவதற்கு விருப்பம் ஆகியவற்றாலும் நமது கூறுபடாநிலை சவால் விடுக்கப்படலாம். ஆயினும், சவால் என்பது நேர்மறையாகவும் புரிந்துகொள்ளப்படலாம். அதாவது நீங்கள் நம்புவதற்கும், புனிதமாக வைத்திருப்பதற்கும் இறைவாக்குச் சாட்சியம் வழங்கத் துணிச்சலுடன் அர்ப்பணிப்பதற்கான அழைப்பாக அது பார்க்கப்படலாம். இப்போதும் நீங்கள் பிறரோடு உறவு கொள்ளும் முறையிலும் நேர்மையோடும் நியாயத்தோடும் நடப்பதற்குச் சவாலை எதிர்கொள்கின்றீர்கள். இன்று இளையோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில், அன்பு செய்ய கற்பது ஒரு சவாலாக உள்ளது. அன்பு செய்வது என்பது, புறக்கணிக்கப்படல், பிறரால் பயன்படுத்தப்படல் போன்ற ஆபத்துக்கள் உள்ளதாகும். அன்புகூர அஞ்சாதீர்கள். ஆயினும் அன்பில் உங்களின் கூறுபடாநிலையைக் காத்துக்கொள்ளுங்கள். கூறுபடாநிலைக்கு எடுத்துக்காட்டுகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். இப்படி வாழும்போது புறக்கணிப்பு, கிண்டல், ஊக்கமிழப்பு போன்றவைகளை எதிர்நோக்க நேரிடும். இந்த இன்னல்களைச் சந்திப்பதற்குத் தூய ஆவியாரிடம் வரம் கேளுங்கள். நம்பிக்கையையும், உயர்ந்த இலட்சியங்களையும் இழந்துள்ள, படிப்பைக் கைவிட்டுள்ள அல்லது தெருவில் வாழும் இளையோரை சிறப்பாக நினைக்கின்றேன். உயர்ந்த இலட்சியங்களை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். கிறிஸ்துவோடு எழுந்து நில்லுங்கள்...

இவ்வாறு கூறிய திருத்தந்தை, சுற்றுச்சூழல்மீது அக்கறை காட்டுமாறும் கேட்டுக்கொண்டார். வெப்பநிலை மாற்றத்தால் உங்கள் நாடு பிற நாடுகளைவிட அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால் மட்டுமல்ல, கிறிஸ்துவைப் பின்செல்கிறவர்கள் என்ற முறையில் படைப்பைப் பாதுகாப்பதில் பொறுப்புள்ள குடிமக்களாகச் செயல்படுங்கள். அடுத்து, ஏழைகள்மீது அக்கறை. ஏழையாக இருப்பதென்பதை நம்மில் பலர் அறிந்துள்ளோம். இந்நேரத்தில் கிறிஸ்துவுக்காக ஏழ்மை வாழ்வுமீது ஆர்வம் கொண்டு, குருத்துவ மற்றும் துறவு வாழ்வைத் தேர்ந்துள்ள உங்களை ஊக்கப்படுத்துகிறேன். உங்கள் நேரத்தையும், உங்கள் திறமைகளையும், உங்கள் வளங்களையும் தேவையில் இருப்போருக்குக் கொடுக்கும்போது அதன் பலன் வித்தியாசமானது. ஒருபோதும் உங்களின் உயர்ந்த இலட்சியங்களை இழக்காதீர்கள். கடவுளின் அன்புக்கு மகிழ்வான சாட்சியங்களாகத் திகழுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...

திருத்தந்தை பிரான்சிஸ் இளையோருக்கு முதலில் ஆற்ற வேண்டிய உரை இது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.