2015-01-19 16:48:00

அடிப்படைவாதக் கொள்களைத் தகர்ப்பதற்கு இஸ்லாமியருக்கு அழைப்பு


சன.19,2015. எந்தவித இனப் பாகுபாட்டையும் புறக்கணிப்பதற்குரிய முயற்சிகளை எடுத்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னின்று நடத்துமாறு எங்களோடு வாழும் முஸ்லிம் அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஈராக் கத்தோலிக்கத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

பாக்தாத் நகரிலுள்ள, ICDM என்ற ஈராக் பன்மைத்தன்மை நிர்வாக மையம் கடந்த வார இறுதியில் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், உலகிலுல்ள 160 கோடிக்கு மேற்பட்ட மிதவாத முஸ்லிம்களிடம் இவ்வாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

அடிப்படைவாதக் கோட்பாடுகளின் அனைத்துவிதமான முறைகளையும் களைவதற்கு ஒன்றிணைந்த திட்டம் ஒன்றை ஊக்குவிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், அடிப்படைவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறும் வலியுறுத்தினார்.

இஸ்லாமின் அடிப்படைவாதக் கோட்பாடுகள் தகர்க்கப்படுவதற்கு அம்மதத்தைச் சார்ந்தவர்களே ஆதரவு கொடுத்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் பரிந்துரைத்தார் முதுபெரும் தந்தை சாக்கோ.

கடந்த ஆண்டு ஜூனுக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஈராக்கின் மொசூல் மற்றும் நினிவே பகுதிகளிலிருந்து வெளியேறிய ஏறக்குறைய ஐந்து இலட்சம் கிறிஸ்தவர்களின் துன்ப நிலைகள் பற்றியும் இக்கருத்தரங்கில் விவரித்தார் முதுபெரும் தந்தை சாக்கோ.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.