2015-01-18 13:33:00

மனிலா தாமஸ் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை, இளையோர் சந்திப்பு


சன.18,2015. சனவரி 18 இஞ்ஞாயிறன்று தலைநகர் மனிலாவில் எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். கனமழைக்கும் புயலுக்கும் பெயர்போன பிலிப்பீன்ஸ் நாட்டில், இஞ்ஞாயிறன்று தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பார்த்து அவரின் அறிவுரைகளைக் கேட்டு ஆசீர் பெறுவதற்காக இப்படி மக்கள் திரண்டிருந்தனர். இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு மனிலா திருப்பீடத் தூதரகத்தில், இத்திருத்தூதுப் பயண ஒத்துழைப்பாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. பின்னர் அங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மனிலா புனித தாமஸ் அக்குவினோஸ் பாப்பிறை பல்கலைக்கழகம் சென்றார். அண்மையில் 400ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய இப்பல்கலைக்கழகம், ஆசியாவிலே மிகப் பெரியதும் மிகப் பழமையானதும் ஆகும். தொமினிக்கன் சபையினர் நடத்தும் இப்பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய முப்பதாயிரம் இளையோர் மத்தியில் திறந்த காரில் வலம்வந்து அவ்வளாக மேடையில் அமர்ந்தார் திருத்தந்தை.

இந்த இளையோர் சந்திப்பு நிகழ்வில், முதலில், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் இளையோர் ஆணைக்குழு தலைவர் ஆயர் லியோபால்டு அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் 14 வயது முன்னாள் தெருச்சிறுமி Jun Chura என்பவர், தன்னைப் பற்றி அறிமுகம் செய்து, தெருவில் குப்பைமேடுகளில் சாமான்களைப் பொறுக்கி வாழ்ந்தபோது தகரங்களால் கிழிக்கப்பட்டது, நடைபாதையில் சென்றவர்களால் பாலியல் முறையில் நச்சரிக்கப்பட்டது உட்பட தனது வேதனையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் அச்சிறுமியோடு நின்று கொண்டிருந்த 12 வயது Glyzelle Palomar என்பவர், அப்பாவிச் சிறார் இவ்வளவு துன்பப்பட கடவுள் ஏன் அனுமதிக்க வேண்டும்? என்று திருத்தந்தையிடம் கேட்டார். இவ்விருவரும் தொடர்ந்து பேச முடியாமல் அழுதனர். அப்படி அவர்கள் பேசியபோது திருத்தந்தையும் அவர்களின் உணர்வில் பங்கு கொண்டதை உணர முடிந்தது. திருத்தந்தை இவ்விடத்தில் இளையோருக்கு உரை நிகழ்த்தியபோது ஏற்கனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வைத்துவிட்டு இஸ்பானியத்தில் பேசுவதற்குத் திருத்தந்தை முடிவெடுத்தது இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எம் நிருபர்கள் கருத்து தெரிவித்தனர்.

அடுத்து, சட்டம் பயிலும் லெயாந்த்ரோ சாந்தோஸ் என்ற இளைஞர், இக்காலத்திய தகவல் தொழில்நுட்பங்களால் சூழப்பட்டுள்ள இளையோர் அன்பின் அர்த்தத்தை அறியாமல் உள்ளனர் என்று திருத்தந்தையிடம் கூறினார். மூன்றாவதாக, ரிக்கி மாகோலோர் என்ற 29 வயது இளைஞர் பேசினார். இவர் மின்னியல் பொறியல் கல்வியை தற்போது முடித்திருப்பவர். தக்லோபானில் ஹையான் புயலில் உயிர்தப்பிப் பிழைத்திருக்கும் மக்களுக்கு, சூரியசக்தியைப் பயன்படுத்தி மின்விளக்கைக் கண்டுபிடித்து உதவியவர். சேவைகளைத் தங்களின் அன்றாடப் பணியோடு எப்படி தொடர்புபடுத்தி வாழ்வது என்று இந்த இளைஞர் திருத்தந்தையிடம் கேட்டார். இவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக திருத்தந்தையின் உரை அமைந்திருந்தது.

இஸ்பானியத்தில் உரை வழங்கலாமா என்று இளையோரிடம் கேட்டு இவ்வுரையைத் தொடங்கினார் திருத்தந்தை. அச்சமயம் திருத்தந்தை பேசப் பேச, அருள்பணியாளர் மாற்கு அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார். இவ்வுரையின் தொடக்கத்தில், இளையோரே, முதலில் ஒரு சோகமான செய்தியைச் சொல்கிறேன். இச்சனிக்கிழமையன்று தக்லோபான் விமான நிலையத்தில் திருப்பலி தொடங்கவிருந்த நேரத்தில், சாரம் சரிந்து விழுந்தது. அது அப்பகுதியில் தன்னார்வத் தொண்டாற்றிய கிறிஸ்டல் என்ற இளம்பெண் மீது விழுந்து அவர் இறந்துவிட்டார். இவரின் வயது 27. உங்களைப் போன்ற வயதை ஒத்தவர் இவர். கத்தோலிக்க நிவாரணப் பணியில் தன்னார்வப் பணியாளராக வேலை செய்தவர். இப்பெண்ணைப் போன்ற இளையோராகிய நீங்கள் அனைவரும் இப்போது என்னோடு சேர்ந்து மௌனமாக அப்பெண்ணுக்காகச் செபியுங்கள் என்றார். பின்னர் விண்ணகத்திலுள்ள நம் அன்னைமரியிடம் செபிப்போம் என்று சொல்லி அருள்நிறைந்த மரியே என்ற செபத்தையும் தொடங்கினார் திருத்தந்தை. பின்னர் அந்த இளம்பெண்ணின் பெற்றோருக்காகவும் செபிப்போம். அப்பெண் அவ்வீட்டுக்கு ஒரே குழந்தை. அவரது தாய் ஹாங்காங்கிலிருந்து வந்து கொண்டிருக்கிறார். அவரது தந்தை மனிலாவில் இருக்கிறார். இப்போது நாம் வானகத் தந்தையை நோக்கிச் செபிப்போம் என்று அச்செபத்தையும் திருத்தந்தை தொடங்கினார். அனைவரும் சேர்ந்து செபித்தனர். இந்த இளையோர் சந்திப்பை முடித்த திருத்தந்தை, மனிலா திருப்பீடத் தூதரகம் சென்றார். அங்கு, தக்லோபானில் இச்சனிக்கிழமையன்று இறந்த இளம்பெண் கிறிஸ்டலினின் தந்தையையும், உறவினர் ஒருவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.