2015-01-18 13:22:00

திருத்தந்தை – கடவுளின் அன்பால் வியப்படைய நம்மை அனுமதிப்போம்


சன.18,2015. பிலிப்பீன்சின் மனிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில், கடல் அலையென திரண்டிருந்த இளையோருக்கு திருத்தந்தை இஸ்பானியத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் தமிழில்..

முதலில், இச்சனிக்கிழமையன்று தக்லோபான் விமான நிலையத்தில் திருப்பலி தொடங்கவிருந்த நேரத்தில் இறந்த கிறிஸ்டல் என்ற இளம்பெண்ணுக்காகவும், அவரின்  பெற்றோருக்காக இளையோருடன் சேர்ந்து செபித்து தனது உரையை ஆரம்பித்தார் திருத்தந்தை. இந்த உரை இளையோரின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதாய் அமைந்திருந்தது.

இந்த நாள் காலையில் உங்களுடன் இருப்பதில் மகிழ்வடைகிறேன். இந்த பிலிப்பீன்ஸ் திருத்தூதுப் பயணத்தில் இளையோராகிய உங்களைச் சந்தித்து, நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களோடு பேச விரும்பினேன். திருஅவை உங்கள்மீது கொண்டிருக்கும் அன்பையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்த விரும்பினேன். இந்நாட்டின் கிறிஸ்தவக் குடிமக்கள் என்ற முறையில் உங்கள் சமுதாயத்தைப் புதுப்பிக்கும் பெரும் பணிக்கும், நல்லதோர் உலகைக் கட்டுவதற்கு உதவவும் உங்களையே அன்பு கலந்த பேரார்வத்தோடும், நேர்மையோடும் அர்ப்பணிப்பதற்கு ஊக்கப்படுத்துகிறேன். என்னிடம் பகிர்ந்துகொண்ட Jun, Leandro Santos, Rikki ஆகியோருக்குச் சிறப்பான நன்றி. உங்கள் மத்தியில் சிறுமிகள் மிகக் குறைவாகவே உள்ளனர். இன்றைய சமுதாயத்தில் நமக்குச் சொல்வதற்குப் பெண்களிடம் அதிகம் இருக்கின்றது. சிலவேளைகளில் நாம் ஆணாதிக்கத்துடன் இருக்கிறோம். பெண்களுக்குப் போதுமான இடத்தை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்கள் நம்மைவிட மாறுபட்ட கோணத்தில், வித்தியாசமான கண்களுடன் பார்ப்பவர்கள். ஆண்கள் புரிந்துகொள்ள முடியாத கேள்விகளைப் பெண்களால் முன்வைக்க முடியும். இப்போதுகூட பதில் இல்லாத ஒரு கேள்வியை இந்தப் பெண் முன்வைத்தார். ஆனால் இப்பெண் வார்த்தையால் சொல்ல முடியாமல் கண்ணீரால் வெளிப்படுத்தினார். எனவே அடுத்த திருத்தந்தை மனிலாவுக்கு வரும்போது நிறையச் சிறுமிகள் இங்கு இருக்க வேண்டும். சிறார் இவ்வளவு தூரம் ஏன் துன்பப்பட வேண்டும். எப்படி கண்ணீர் விடுவது என்று, இன்றைய உலகுக்குத் தெரியவில்லை. சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் கண்ணீரை, தேவையில் இருப்போரை நாம் புரிந்து கொள்வதில்லை. எப்படி கண்ணீர் விடுவது என்று நான் தெரிந்திருக்கிறேனா என்று இன்று நாம் கேட்டுப் பார்ப்போம் என்று கூறிய திருத்தந்தை, தகவல் தொழில்நுட்பங்களால் நிரம்பி வழியும் இன்றைய உலகம், கடவுளன்பின் வியப்புக்களைத் தழுவிக் கொள்வதற்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார். தகவல் தொழில்நுட்பம் தன்னிலே மோசமானது இல்லை. தேவைப்படும்போது அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை அறிந்திருப்பது ஒரு சவால். தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முறை தெரியாமல், தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள் போன்று மாறும் ஆபத்தை இளையோர் எதிர்கொள்கின்றனர். அருங்காட்சியகங்கள் போன்ற இளையோர் நமக்குத் தேவையில்லை, ஆனால் நமக்கு புனித இளையோர் தேவைப்படுகின்றனர். புனிதராக மாறுவது அன்பின் சவால். அன்புகூர வாழ்வில் கற்றுக்கொள்வது மிக முக்கியமானதாகும். அது பல்கலைக்கழகத்திலோ அல்லது உலகிலோ, எங்கும் அது முக்கியம். மனம், இதயம், கரங்கள் ஆகிய மூன்று மொழிகளில் அன்பு ஈடுபட்டுள்ளது. நீங்கள் நினைப்பதை நீங்கள் உணர வேண்டும், அதை நடைமுறையில் காட்ட வேண்டும். உங்களின் தகவல் இதயத்தின் ஆழத்திற்கு வருகிறது. அதை நீங்கள் உண்மையான வேலைகளில் நிதர்சனப்படுத்த வேண்டும்.

கடவுள், வியப்புகளின் கடவுள். ஏனெனில் அவர் நம்மை எப்போதும் முதலில் அன்பு கூர்கிறார். அவர் வியப்புகளுடன் நமக்காகக் காத்திருக்கிறார். இளையோரே, அன்பு, வியப்புக்களை உங்களுக்குத் திறக்கின்றது. அன்புகூரவும், அன்புகூரப்படுவதை உணரவும் அது வியப்பாக இருக்கின்றது. இவ்வாறு கூறியபோதே, நினைக்க, உணர, செயல்படுத்த என்ற வார்த்தைகளை கூட்டத்தினர் மீண்டும் மீண்டும் சொல்லுமாறு கூறினார் திருத்தந்தை. இளையோர் வெள்ளமும் உரத்த குரலில் கூறியது. 

மனிலாவில் இளையோருக்கு இவ்வாறு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.