2015-01-18 09:11:00

திருத்தந்தை – ஆசியாவில் விசுவாசத்தின் மறைப்பணியாளர்களாக இருங்கள்


சன.18,2015. பிலிப்பீன்சின் மனிலா ரிசால் பூங்காவில் இஞ்ஞாயிறன்று திருப்பலியில் பங்குபெற்ற இலட்சக்கணக்கான விசுவாசிகளுக்குத் திருத்தந்தை ஆற்றிய மறையுரை. பிலிப்பீன்ஸ் ஆசியாவில் முதன்மையான கத்தோலிக்க நாடாக உள்ளது, இதுவே அந்நாட்டுக்கு கடவுளின் சிறப்புக் கொடை, ஓர் ஆசீர்வாதம், ஓர் அழைப்பு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இஞ்ஞாயிறன்று பிலிப்பீன்சில் குழந்தை இயேசு ஞாயிறு சிறப்பிக்கப்பட்டதை மையமாக வைத்து மறையுரையாற்றினார் திருத்தந்தை. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்:ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்” (எச.9 :6  ) என்ற வார்த்தைகளுடன் மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை, இந்த குழந்தை இயேசு திருவுருவம் இந்நாடெங்கும் நற்செய்தி பரவ உதவியுள்ளது. அரசர் போன்று உடையணிந்துள்ள இத்திருவுருவம் இறையாட்சிக்கும், ஆன்மீகக் குழந்தைமைக்கும் இடையேயுள்ள தொடர்பை நமக்கு நினைவுபடுத்துகின்றது. நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்று பாடியதை இந்த நாள்களில் கேட்க முடிந்தது. இந்தப் புனிதக் குழந்தை நமது தனித்துவத்தை நினைவுபடுத்துகிறார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைத் தேர்ந்தெடுத்து ஆசீர்வதித்துள்ளார். இதுவே நம் தனித்துவம். ஆயினும் நம்மைச் சுற்றிலும் துன்பங்கள், நெருக்கடிகள் மற்றும் தவறுகளை நாம் காணும்போது இவற்றைக் கைவிட சோதிக்கப்படுகிறோம். கடவுள் நமக்காக வைத்திருக்கும் திட்டத்தின் பெரிய அச்சுறுத்தல் பொய். சாத்தான் பொய்களின் தந்தை. நவீனம் என்ற தோற்றத்தில், அழிந்துபோகும் ஆசைகளைக் காட்டி அது நம்மை ஏமாற்றுகிறது. அதனால் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள கொடைகளை, சூதாட்டம், மதுபானம் மற்றும் சூழ்ச்சித்திறன்களால் வீணாக்குகிறோம். நாம் கடவுளின் குழந்தைகள் என்பதை மறக்கிறோம். நமது தனித்துவம் பாதுகாக்கப்படுமாறு புனிதக் குழந்தை நமக்கு நினைவுபடுத்துகிறார். இவரே இந்நாட்டின் பெரிய பாதுகாவலர். இவருக்கும் இவ்வுலகத்தில் பாதுகாப்புக் குடும்பம் ஒன்று இருந்தது. இக்காலத்தில் குடும்பங்களின் உண்மையும், புனிதமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றது. எனவே குடும்பங்களையும், இளையோரையும் பாதுகாக்க வேண்டும். நற்செய்தியில் இயேசு குழந்தைகளை வரவேற்கிறார். எனவே சமுதாயத்தில் குழந்தை ஒரு கொடையாக வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். இளையோரின் நம்பிக்கைகள் பறிக்கப்பட்டு அவர்கள் தெருக்களில் வாழ்வதற்கு அனுமதிக்கக் கூடாது. குழந்தை இயேசு நேர்மையின்மையையும் ஊழலையும் எதிர்த்தார். அவர் சிலுவையின் வல்லமையால் வெற்றி பெற்றார். இந்த நாடும் குடும்பங்கள் தொடங்கி எல்லாரும், நீதி, கூறுபடாநிலை மற்றும் அமைதியில் வாழ குழந்தை இயேசு உதவுவாராக. இந்த நாடு, ஆசியாவுக்கும், உலகுக்கும் நற்செய்தியின் மகிழ்வின் சாட்சிகளாகவும் மறைப்பணியாளர்களாவும் திகழட்டும். எனக்காகச் செபியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...

இவ்வாறு திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.            

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.